

சென்னையில் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் போக்குவரத்து இருக்கிறது. மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட பிறகு அதன் டிக்கெட் கட்டணம் அதிகம் என விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் பயணிகளின் ஆதரவால் இன்று வரை வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை முழுக்க மெட்ரோ ரயில் சேவையை வழங்க விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.
மெட்ரோ ரயிலில் சைக்கிளைக் கொண்டு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மும்பை மெட்ரோ ரயிலில் பெண் பயணி ஒருவர் சைக்கிளைக் கொண்டு சென்றது இந்திய அளவில் வைரலானது.
இதனால் சென்னை மெட்ரோ ரயில்களிலும் சைக்கிளைக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், மெட்ரோ ரயில்களில் சைக்கிளைக் கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படாது என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயிலில் பயணித்த பிறகு, பயணிகள் அங்கிருந்து செல்வதற்கு ஏதுவாக சைக்கிள்களை இலவசமாக வழங்கி வந்தது சென்னை மெட்ரோ நிர்வாகம். சைக்கிள்களை இலவசமாக வழங்குவதன் மூலம் மெட்ரோ ரயில் போக்குவரத்து சென்னையின் கடைசி மைல் இணைப்பு வரை சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சைக்கிள்களை ரயிலில் எடுத்து செல்லக்கூடாது என்பதால், இது பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.
பயணிகள் பயணத்தை தொடங்குவதற்கும், முடிப்பதற்கும் அந்தந்த ரயில் நிலையங்களில் சைக்கிள்களை அவ்வப்போது எடுக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. சென்னையில் வெகுவிரைவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. இந்நிலையில் ரயில்களில் சைக்கிளை எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டால், கடைசி மைல் இணைப்பு என்பது சாத்தியமாகும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மெட்ரோ ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால், சைக்கிளை எடுத்து செல்வது இடப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இது ஒரு பலவீனமான காரணம் என பயணிகள் விமர்சிக்கின்றனர். கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் சைக்கிளை அனுமதிப்பது, மடிக்கும் சைக்கிள் மற்றும் சைக்கிளை ரயிலில் ஏற்றி செல்வதற்கு தனி ரேக்குகள் உள்ளிட்ட அம்சங்களை ஏற்படுத்தித் தர மெட்ரோ ரயில் நிர்வாகம் நிச்சயமாக ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம் என பயணிகள் கருதுகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) சிறிய அளவிலான மற்றும் மடிக்கும் சைக்கிள்களை ரயிலில் எடுத்து செல்ல அனுமதித்தது. பின்னர் சிறிது நாட்களிலேயே இந்த அனுமதியை ரத்து செய்தது சென்னை மெட்ரோ நிர்வாகம்.
இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் தற்போது நான்கு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் சைக்கிள்களை ஏற்றிச் செல்வதற்கு போதிய இடமிருக்காது. மேலும் சென்னையில் இருக்கும் சாலை நிலைமைகள் காரணமாக, சைக்கிளை ரயிலில் அனுமதித்தால் ரயில் பெட்டிகள் அழுக்காவதோடு, துர்நாற்றம் வீசும் அபாயம் ஏற்படும். இது மற்ற பயணிகளுக்கு அசவுரியத்தை ஏற்படுத்தக் கூடும்.
இதன் காரணமாகவே சைக்கிளை மெட்ரோ ரயில்களில் அனுமதிக்க நாங்கள் மறுக்கிறோம். அடுத்த மாதத்தில் போரூர் முதல் பூந்தமல்லி வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ வழித்தடங்கள் திறக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்கள், 4.5 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட உள்ளன” என அவர் தெரிவித்தார்.