எப்போது வரும்..? ஆரஞ்ச் அலெர்ட் ! ரெட் அலர்ட் ! பேரிடர்..! இத்யாதி! இத்யாதி! எப்போதுமே, வானிலையை நூறு சதவீதம் கணிக்கக் கூடிய நிலை இந்தியாவில் இருந்தது கிடையாது.
இந்தியா, பிற நாடுகளைப் போலவே ஒரு வானிலை முன்னறிவிப்பு முறையைப் பயன்படுத்தி இருக்கிறது. ஆனால், இதன் மூலம் ஒரு பகுதியில் மட்டுமே துல்லியமாக வானிலையைக் கணிக்க முடிகிறது.
இந்தியா விவசாயத்தை அதிகம் சார்ந்துள்ள நாடாதலால், வானிலை, முக்கிய பங்கினை வகிக்கிறது. நமது நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த, புனேயிலுள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம், "பாரத் வானிலை முன்னறிவிப்பு" (பி.எப்.எஸ்.) அமைப்பை சமீபத்தில் உருவாக்கியுள்ளது பெருமைக்குரிய விஷயம்.
பாரத் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு (பி.எப்.எஸ்) விபரங்கள்:-
உலக அளவில், தற்சமயம் "பாரத் வானிலை முன்னறிவிப்பு" (பி.எப்.எஸ்) மிகவும் துல்லியமான உயர்ந்த தொழில் நுட்பமாகும். இதன் நோக்கம் கனமழை, சூறாவளி மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள் தொடர்பான முன்னறிவிப்புக்களின் தன்மையை மேம்படுத்துவதாகும்.
பிஎப்எஸ் - முக்கோண கன சதுர எண்முக மாதிரியைப் பயன் படுத்துகிறது. தவிர, இந்தியாவின் உயர் செயல் திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டரால் இயக்கப்படுவதால், 5 நாட்களுக்கு முன்பாகவே, கிராமங்கள், ஊராட்சி போன்ற பல இடங்களில், மழை, வெப்பநிலை, காற்று மற்றும் ஈரப்பதம் போன்றவைகளை பிஎப்எஸ் வழியே துல்லியமாக அறிய முடியும். விவசாய சம்பந்தப்பட்ட பல்வேறு வேலைகளைத் திட்டமிட, பெரிய அளவில் பிஎப்எஸ் உதவும்.
பிஎப்எஸ் - இல் கண்காணிக்க, அர்க்கா சூப்பர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படுவதால், நான்கு மணி நேரத்திலேயே,
6 கி.மீக்கு 6 கி.மீ. பரப்பளவிற்கு துல்லியமான கணிப்புக்களை வெளியிட இயலும். அநேக வெளி நாடுகளில், வானிலைக் கணிப்பு 9 கி.மீக்கு 12 கி.மீ வரை மட்டுமே இருக்கிறது. இந்திய விஞ்ஞானிகள், உலக அளவில் மிகச்சிறந்த நடைமுறையை உருவாக்கியுள்ளனர்.
டி டபிள்யூ ஆர்.என்று அழைக்கப்படும் டாப்ளர் ரேடார்கள் மழையைக் கண்காணிக்கவும், 3 மணி நேரம் வரையில் சரியான எச்சரிக்கைகளை வழங்கவும் பயன்படுகின்றன. தற்போது 40 டாப்ளர் ரேடார்கள் உள்ளன. இதன் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு உதவ;
குறிப்பிட்ட இடத்தில் பேரிடர் ஏற்படும் முன்பே மீட்பு பணிகளுக்கு ஆயத்தமாக;
கப்பல் மற்றும் விமான போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதோடு, வானிலைக் கணிப்பைப் பொருத்து தேவையான மாற்றங்களைக் கையாள, என சிறப்பாக செயல்படக் கூடியது பிஎப்எஸ்.
பிஎப்எஸ் மூலம் இனி வரும் காலங்களில், வானிலை முன் அறிவிப்புகள் மிகவும் துல்லியமாக இருக்கும். மேலும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பிஎப்எஸ்.
பாரினில், பலரும் வியக்கும் வண்ணம் இந்தியாவில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள "பாரத் முன்னறிவிப்பு அமைப்பு" முறைக்கு ஒரு " ஓ" போடலாமா..!
"ஓ....! ஓஹோ....!"