

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெகு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டணியை வலுப்படுத்த தமிழகத்தின் முன்னணி கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவ்வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மதியம் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்தார்.
இந்நிலையில் பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு முடிவு கட்டிய நிலையில், எங்களின் அடுத்த இலக்கு தமிழ்நாடு தான் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்த அமித் ஷா-வின் பாதுகாப்பை உறுதி செய்ய, திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று பாஜக நிர்வாகிகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவது, தொகுதி பங்கீடு மற்றும் தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நேற்று ஆலோசிக்கப்பட்டன.
இன்று காலை 10 மணிக்கு மேல் திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வருகை புரிந்த அமித் ஷா, ரங்கநாதர் சுவாமியை வழிபட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதியை மறுத்த நிலையில், வெளி மாவட்ட பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் குறித்து அமித் ஷா கூறுகையில், “பாஜக ஆட்சியில் இதுவரை தமிழ்நாட்டிற்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசு, தொடர்ந்து உழைத்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்தது தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சிக்கு விரைவில் முடிவரை எழுதப்படும். கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதிகளில் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்தவர்கள் யார் என்பதை நிர்வாகிகள் தேர்வு செய்து சீட் வழங்க வேண்டும். பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி முடிவுக்கு வந்து, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. எங்களின் அடுத்த இலக்கு தமிழ்நாடு தான்.” என அமித் ஷா நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதையும், பாஜகவிற்கு குறைந்த இடங்களே ஒதுக்கப்படும் என்பதையும் மறைமுகமாக தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருப்பது உறுதியான நிலையில், அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இரு வேறு கருத்துக்களை கூறியிருப்பது, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை இணைக்க பாஜக ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருப்பினும் இவர்கள் இருவரும் எந்த கூட்டணியில் இணைவார்கள் என்ற தகவல் இன்னும் உறுதியாக வெளியாகவில்லை. இந்நிலையில் தவெக-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் தவெக கூட்டணியில் இணைவார்கள் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் கூட்டணி விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கிறது