அதிமுகவில் மெகா ட்விஸ்ட்: டார்கெட் விஜயபாஸ்கர்.. ஆனால் விக்கெட்டானது பெஞ்சமின்!

அதிமுக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் திமுகவில் இணைந்துள்ளார்.
 P Benjamin with MK stalin
P Benjamin with MK stalinimage credit-thehindu.com
Updated on

அதிமுக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருடன் சேர்ந்து அதிமுக நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்தனர். அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், இந்த முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதுடன் பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தது. அதன் பின்னர் தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் புதுப்புது மாற்றங்களை சந்தித்து வருகிறது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிலும் குறிப்பாக சமீபகாலமாக அதிமுகவில் அரங்கேறி வரும் உட்கட்சி மோதல்கள் இன்னும் முழுமையாக அடங்காத சூழலில், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் வேகவேகமாக அதிமுகவிலிருந்து விலகி மாற்று கட்சிகளை தேடி வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து சமீபத்திய நாட்களில் முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், என்.ஆர். சிவபதி, கடம்பூர் சி. ராஜு, மற்றும் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 முக்கிய தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் ஆளும் தவெகவில் இணைந்தனர்.

இதையும் படியுங்கள்:
திமுகவில் இணைய காய் நகர்த்தும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் , அண்ணாமலையை கைவிடுகிறாரா..?
 P Benjamin with MK stalin

இதைத்தொடர்ந்து கட்சியின் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து தவெகவில் இணைந்துள்ளனர். அதிமுகவின் உட்கட்சி பூசல், அதிருப்தி மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகள் தவெகவில் தெரிவதாக கூறி இந்தத் தலைவர்கள் அடுத்தடுத்து கட்சி மாறியுள்ளனர்.

அந்த வரிசையில் சி.விஜயபாஸ்கர் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் பரவி அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, அதிமுக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் நேற்று திமுகவில் இணைந்து அரசியல் களத்தை அதிரவிட்டுள்ளார்.

கடந்த 1988-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த பெஞ்சமின், சுமார் 15 ஆண்டுகள் வில்லிவாக்கம் ஒன்றிய அதிமுக செயலாளராகப் பணியாற்றினார். சென்னை மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் சென்னை மாநகராட்சியின் துணை மேயர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

2016 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அவர் பள்ளிக் கல்வி அமைச்சராகவும், பின்னர் ஊரகத் தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.

2021 மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்களில் மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார்.

Benjamin with EPS
Benjamin with EPSimage credit-@P Benjamin

தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்தபோது, ​​எஸ்.பி.வேலுமணி தரப்பை ஆதரித்ததால் பெஞ்சமினை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி நீக்கி இருந்தார். அப்போதே, பெஞ்சமின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இணையக்கூடும் என்று பரவலாக ஊகங்கள் எழுந்தன. இந்நிலையில் பதவி பறிக்கப்பட்ட ஒருசில வாரங்களிலேயே அவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளா்களுக்கு போட்டிளித்த பெஞ்சமின், எதிா்வரும் காலங்களில் திமுக தலைவா் முக ஸ்டாலின், உதயநிதியின் கட்டளையை ஏற்று கழகப்பணி மேற்கொள்வேன். ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொண்டர்களை அரவணைத்து வழிநடத்தும் அவரது பண்பால் கவரப்பட்டு இந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறேன். இதுவரை நான் சார்ந்திருந்த இயக்கத்திற்கு எவ்வாறு உண்மையாகவும் விசுவாசமாகவும் பணியாற்றினேனோ, அதேபோன்று இனி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்றார்.

மேலும் பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் வந்த தலைமையின் கீழ் நான் உண்மையாகப் பணியாற்றினேன். ஆனால், இன்றைய அரசியல் சூழலில் தொடர்ந்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டார்.

அதிமுகவில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் வெளியேறுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அது தொடர்பாக அடுத்த முறை செய்தியாளர்களை சந்திக்கும்போது விரிவாக பேசுகிறேன்’ என்று பதிலளித்தார்.

அதிமுகவில் தலைவர்கள் அடுத்தடுத்து கட்சி மாறுவதற்கும், வெளியேறுவதற்கும் தொடர் தேர்தல் தோல்விகள், உட்கட்சி பூசல் மற்றும் தலைமையின் மீதான அதிருப்தி ஆகியவையே முக்கியக் காரணங்களாக உள்ளன. குறிப்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. கட்சியில் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், தங்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மோதல், ஓ.பன்னீர்செல்வம் போன்ற முக்கிய தலைவர்கள் நீக்கப்பட்டது மற்றும் உட்கட்சி பிளவுகள் போன்ற காரணங்களால் அதிமுகவின் அடிமட்ட கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது, இதுவே தலைவர்கள் மாற்று வழிகளைத் தேட தூண்டுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: அதிமுகவில் அடுத்த பூகம்பம்.! முன்னாள் அமைச்சர் திடீர் விலகல்.! பின்னணி என்ன?
 P Benjamin with MK stalin

இனிவரும் காலங்களில் அதிமுகவில் இருந்து எத்தனை முக்கிய தலைகள் அடுத்தடுத்து கட்சி தாவ காத்திருக்கின்றனர் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com