ஜஸ்பிரித் பும்ரா 907 புள்ளிகளைக் குவித்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வினின் நீண்டகால சாதனையை முறியடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசையில் அதிக புள்ளிகளை குவித்த இந்தியர் என்ற சிறப்பை பும்ரா பெற்றுள்ளார்.
'இந்திய கிரிக்கெட்டின் கோஹினூர்' ஜஸ்பிரித் பும்ரா, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சாளர்களுக்கான சாதனையை கடந்ததால், இந்திய கிரிக்கெட்டில் இதுவரை கண்டிராத உச்சத்தை எட்டி உள்ளார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா அதன் மூலம் மேலும் 3 புள்ளி சேகரித்ததால் அவரது ஒட்டுமொத்த தரவரிசை புள்ளி எண்ணிக்கை 907 ஆக உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசையில் அதிக புள்ளிகள் குவித்த இந்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இதற்கு முன்பு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 904 புள்ளி எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. கடந்த வாரம் அவருடன் சமனில் இருந்த பும்ரா இப்போது அவரை முந்தியுள்ளார். ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் அதிக புள்ளிகள் எடுத்தவர்களின் வரிசையில் பும்ராவின் 907 புள்ளிகள் 17-வது இடத்தை பெற்றுத் தந்துள்ளது.
தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சோபிக்காததால் தரவரிசையில் 2-ல் இருந்து 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் (843 புள்ளி), பேட் கம்மின்ஸ் (837 புள்ளி) ஆகியோர் தலா ஒரு இடம் அதிகரித்து 2 மற்றும் 3-வது இடங்களை வகிக்கிறார்கள்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 7 விக்கெட்டுகளை அள்ளிய தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சென் 11-ல் இருந்து 5-வது இடத்துக்கு வந்துள்ளார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 10-வது இடத்திலும், முகமது சிராஜ் 25-வது இடத்திலும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கிடையில், 914 ரேட்டிங் புள்ளிகளுடன் க்ளென் மெக்ராத்துடன் இணைந்து ஐந்தாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா பேட் கம்மின்ஸ், மெல்போர்னில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் நான்காவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 90 முக்கிய ரன்களை எடுத்த பிறகு பேட் கம்மின்ஸ் டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பாக்சிங் டே டெஸ்டில் 82 ரன்களில் முதல் இன்னிங்ஸ் ஆட்டமிழக்க, அவர் 854 ரேட்டிங் புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார், அதே நேரத்தில் நிதீஷ் குமார் ரெட்டியின் முதல் டெஸ்ட் சதம், டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறி 53வது இடத்திற்கு முன்னேற வைத்துள்ளது.