Tirupattur Collector office
Tirupattur Collector office

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த நபர்!

Published on

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை கலெக்டர் பெலிக்ஸ்ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலைவசதி, கடனுதவி, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 355 மனுக்கள் வழங்கப்பட்டது. தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான தொழிலாளர் ஒருவருக்கு மாதந்தோறும் ரூ.1200 ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்:

கூட்டத்தில் ஆம்பூர் அருகே நாயக்கனேரியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்,

எங்கள் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் மருத்துவ வசதிக்காக ஆம்பூருக்கு சென்று வர வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் சிரமப்படுகின்றனர். எனவே எங்கள் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரவேண்டும். மேலும் ஆம்பூரில் இருந்து நாயக்கனேரி வரை செல்லும் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

சாலை வசதி:

சின்ன கந்திலி சின்னபைய கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்,

எங்கள் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் மண் சாலை மட்டுமே உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே எங்களுக்கு தார்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியிருந்தனர்.

நாட்டறம்பள்ளி அருகே ரெட்டியூர் ஏ.டி.காலனி காவேரிபட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்,

எங்கள் ஊரில் 750 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் ஊருக்கு சென்று வரும் தெருக்கள், கோவில் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் பண்டிகை உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் சென்றுவர போதுமான இடம் இல்லை. எனவே எங்கள் பகுதியில் உள்ள தெருக்களை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம்!
Tirupattur Collector office

மண் எண்ணெய் கேனுடன் வந்த நபர்:

திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது மனைவியுடன் கசிநாயக்கன்பட்டியில் உள்ள தனது நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி மனு அளிக்க வந்தார். அவரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது அவர் கொண்டு வந்த பையில் ஒரு லிட்டர் மண்எண்ணெய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் ஆறுமுகத்திடம் கேட்டபோது தனது கோரிக்கை மனு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலை செய்வதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து, கடுமையாக எச்சரித்து கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர்.

tirupattur Collector office
tirupattur Collector office

பதவி உயர்வு கேட்டு வந்தவருக்கு ரத்தக்காயம்:

திருப்பத்தூர் அருகே ஜொள்ளகவுண்டனூரில் அங்கன்வாடி உதவியாளராக பணியாற்றும் மாற்றுத்திறனாளியான வேண்டாமணி தனக்கு அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அவர் கலெக்டர் அலுவலக படிக்கட்டில் திடீரென் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பொதுமக்கள் அவரை மீட்டு அங்கு அமர வைத்தனர். அப்போது அங்கு மாற்றுத்திறனாளிகளிடம் மனு வாங்கி கொண்டு இருந்த கலெக்டர் தர்ப்பகராஜ் இதை பார்த்த உடன் வேண்டாமணியை சந்தித்து அவரது கோரிக்கை குறித்து கேட்டு அறிந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

இதையும் படியுங்கள்:
News 5 – (24.09.2024) சேம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் AK!
Tirupattur Collector office

மகாத்மா காந்தி படத்துடன் மனு அளிக்க வந்த நபர்:

திருப்பத்தூர் அருகே ஜடையனூரை சேர்ந்த அறிவுமணி என்பவர் மகாத்மா காந்தி படத்தை சட்டையில் மாட்டியவாறு மனு அளிக்க வந்தார். அவர் கூறியதாவது:

நான் எனது நிலம் தொடர்பாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் பல்வேறு மனுக்களை அளித்து உள்ளேன். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது கோரிக்கையை வலியுறுத்து காந்தி ஜெயந்தி அன்று எனது ஊரில் எனது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். எனது போராட்டத்துக்கு அனுமதி வழங்கக்கோரி மனு அளிக்க வந்ததாக கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com