தெற்கு பிரேசிலின் பிரபல சுற்றுலா நகரமான கிராமடோ மீது சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதியதில் 10 பேர் பலியாகினார்கள்.
விபத்துகளிலேயே மிகவும் மோசமானது ஹெலிகாப்டர் விபத்துதான். வானத்திலிருந்து கீழே விழுந்தது என்றால், ஒருவர் பிழைப்பதுக்கூட மிக மிக அரிது. அதனாலேயே மற்ற போக்குவரத்துகளை விட ஹெலிகாப்டர் பயணத்திற்கு பல முன்னேற்பாடுகள் செய்யப்படும். ஆனால், அதையும் மீறி பல இடங்களில் அவ்வப்போது ஹெலிகாப்டர் விபத்து ஏற்படுகிறது.
அந்தவகையில் நேற்று பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் உள்ள கிராமடோ நகரில் விமானம் குடியிருப்பு கட்டிடத்தின் 2வது தளத்தின் மீது மோதியது. இந்த மிகப்பெரிய விபத்தினால் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 17 பேரில் பலத்த தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மோதியதால் ஏற்பட்ட தீயினால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
உள்ளூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டதாக தேசிய சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. விமானம் முதலில் ஒரு கட்டிடத்தின் புகைபோக்கி மீது மோதியது. பின்னர் அருகில் இருந்த மற்றொரு குடியிருப்பு கட்டிடத்தின் 2வது தளத்தின் மீது மோதியது. விமானத்தின் சிதறிய பாகங்கள் மக்களின் குடியிருப்பு பகுதிகளை சேதப் படுத்தியதாகவும் செய்திகள் வந்தன.
இந்த விமானத்தில் 10 பேர் பயணித்ததாகவும், அவர்கள் யாருமே பிழைக்கவில்லை என்றும் உள்ளூர் செய்திகளில் வெளியாகியுள்ளன.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த இந்த இடம் ஒரு சுற்றுலா தலமாகும். அதுவும் கிறிஸ்துமஸ் நேரத்தில் அங்கு அதிகமான மக்கள் கூடி கொண்டாடும் இடமாக இருந்து வருகிறது. இப்படியான சமயத்தில் இதுபோன்ற விபத்து ஏற்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்த விபத்து குறித்தான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.