ஆஸ்திரேலிய தீவுக்கு சுற்றுலா சென்றபோது அங்கிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ வைரலாகி வருகிறது.
சமீபக்காலமாக விமானங்கள் பற்றிய செய்திகள் அதிகம் வருகின்றன. குறிப்பாக விமான விபத்துக்கள், தொழில்நுட்பக் கோளாறால் விமானம் புறப்பட தாமதமாகுதல் போன்ற பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. விமான விபத்து ஏற்பட்டால், அதனால் வரும் பாதிப்பு மற்ற விபத்துக்களின் பாதிப்பை விட அதிகமாக இருக்கும். அதனால், மிகவும் கவனமாகவே விமானத்தை இயக்குவார்கள். அப்படி இருந்தும்கூட சமீபக்காலமாக விபத்துக்கள் அதிகமாகி வருகின்றன.
இப்படியான நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுலா விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஸ்வான் ரிவர் சீப்ளேன்ஸுக்குச் சொந்தமான விமானம், ரோட்னெஸ்ட் தீவிலிருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத் தலைநகரான பெர்த்தில் உள்ள அதன் தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்த விமான விபத்தில் சுவிஸ் மற்றும் டேனிஷ் சுற்றுலா பயணிகள் உட்பட 3 பேர் பலியாகினர். சுவிஸ் சேர்ந்த 65 வயது பெண், டென்மார்க்கை சேர்ந்த 60 வயது ஆண் மற்றும் பெர்த்தை சேர்ந்த 34 வயது ஆண் விமானி என மூன்று பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். செஸ்னா 208 கேரவனில் இருந்த ஏழு பேரில் ஒருவர் மட்டும் ரோட்னெஸ்ட் தீவில் விபத்தின் பின்னர் காயமின்றி மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்த மூவரும் பெர்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விடுமுறைக்காக ரோட்னஸ்ட் தீவுக்குச் சென்றிருந்த குடும்பங்களின் கண் முன்னே விமானம் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கடலில் விழுந்த விமானங்களின் பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்திற்கான காரணம் மனித கவனக்குறைவா? தொழில்நுட்ப கோளாறா? என்பது இன்னும் தெரியவரவில்லை. இதுகுறித்தான விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்குள்ளான விமானம் கடலில் மிதக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.