உணவுப் பழக்கம் - இந்த தவறுகளை செய்கிறீர்களா? மாற்றிக் கொள்ளுங்கள்!

Eating habits
Mistakes
Published on

உலகில் உள்ள எந்த உயிரினமும் உயிர் வாழ வேண்டுமெனில் உணவு அத்தியாவசியமானது. இதில் குறிப்பிடத்தக்க அளவில் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் மட்டும் தமக்கான உணவுகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றனர். அதேபோல் சில தவறுகளையும் செய்கின்றனர். அவ்வகையில் நாம் தெரிந்தும், தெரியாமலும் உணவுப் பழக்கத்தில் செய்து வரும் சில தவறுகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.

பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் சிலர் நேரமின்மை காரணத்தாலும், சிலர் டயட் என்ற பெயரிலும் காலை உணவைத் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் நாம் செய்யும் முக்கியமான தவறுகளில் இதுவும் ஒன்று. தினந்தோறும் மூன்று வேளை உணவு உண்ண வேண்டும். அதே சமயம் இரவில் அதிகமாக உண்பதும் தவறு தான். இது வாய்வுத் தொல்லை மற்றும் செரிமானப் பிரச்னைக்கு வழிவகுக்கும்.

பசியே இல்லாத சமயங்களில் சாப்பிடுவது தவறான பழக்கமாகும். பசிக்கும் போது சாப்பிடுவது தான் நல்லதும், ஆரோக்கியமானதும் கூட.

காய்கறிகள் மற்றும் பழங்களை அலசும் போது, ஒரு கிண்ணத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் அலச வேண்டாம். குழாயைத் திறந்து விட்டு நேரடியாக அலசுவது தான் சிறந்தது.

பழங்களை குடிப்பதற்கு ஏற்ற தண்ணீரில் மட்டுமே அலசி சாப்பிட வேண்டும். அசுத்தமாக இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.

சைவப் பிரியர்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்திருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

குழந்தைகள் விளையாட்டில் சிறந்து விளங்கினால், நன்றாக படித்தால் மற்றும் ஏதேனும் ஒன்றை சிறப்பாகச் செய்தால், உடனே இன்றைய பெற்றோர்கள் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட்டுகளை வாங்கித் தருகின்றனர். இது முற்றிலும் தவறான பழக்கமாகும். இதனைக் காட்டிலும் பழங்கள் மற்றும் காய்கறி வகைகளை வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு ஆரோக்கிய உணவின் மீதான நாட்டத்தை அதிகரிக்கச் செய்யுங்கள்.

கோடை காலங்களில் அதிக வெப்பநிலை நிலவும் என்பதால், வயிறு நிரம்பும் அளவிற்கு உணவருந்துவதும் நாம் செய்யும் தவறு தான். இது செரிமானக் கோளாறு போன்ற தேவையில்லாத அசவுகரியங்களை ஏற்படுத்தும்.

நேரமின்மை காரணமாக பாதியளவு மட்டுமே வெந்த மற்றும் வேகாத உணவுகளை சாப்பிடுவது உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
வயிற்றில் காணப்படும் உணவு சேமிப்புக் கிடங்கு... இது ஒரு விசித்திர எறும்பு!
Eating habits

ஒருசிலர் மன உளைச்சலில் இருக்கும் போதும், கோபத்தில் இருக்கும் போதும் சரியாக சாப்பிட மாட்டார்கள். இந்தப் பழக்கத்தை கைவிடுவது தான் நல்லது. நம்முடைய கோபத்தை உணவின் மீது காட்டுவது சரியாகாது.

சாப்பிடும் போது பாதியில் தண்ணீர் குடிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. ஆனால் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவும், சாப்பிட்ட பின் அரைமணி நேரம் கழித்தும் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். இம்முறையில் தண்ணீர் குடித்தால், உணவின் முழுப் பலனும் நமக்கு கிடைக்கும் என உணவு நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேற்கண்ட தவறுகளை உணவுப் பழக்கத்தில் நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருந்தால் இனி அதனை மாற்றிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவு மட்டும் நல்ல பலனைக் கொடுத்து விடாது. சரியான உணவுப் பழக்கமும் அவசியம் தேவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com