நாசாவின் பெர்சவரன்ஸ் (Perseverance) ரோவர் ( Nasa's Rover), செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு வறண்ட நதிப் படுகையில் பண்டையகால நுண்ணுயிரிகளின் வாழ்க்கைத் தடயங்கள் இருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியமான அறிகுறிகளைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த ஆய்வில் நேரடியாக ஈடுபடாத விஞ்ஞானிகளான ஜேனிஸ் பிஷப் (SETI Institute) மற்றும் மாரியோ பேரென்டே (University of Massachusetts Amherst) ஆகியோர், உயிரினங்கள் அல்லாத பிற இயற்கையான செயல்முறைகளும் இந்த நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெர்சவரன்ஸ் ரோவர் 2021-ஆம் ஆண்டு முதல் செவ்வாயில் சுற்றி வருகிறது. இதனால் நேரடியாக உயிரினங்களைக் கண்டறிய முடியாது என்பதால் அதற்குப் பதிலாக, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான இடங்களாகக் கருதப்படும் பாறைகளில் துளையிட்டு, மாதிரிகளைச் சேகரிக்கிறது.
இப்படியான நிலையில், ஜோயல் ஹுரோவிட்ஸ் (Stony Brook University) தலைமையிலான குழுவினர், நெரெட்வா வால்லிஸ் (Neretva Vallis) என்ற நதிப் படுகையில் உள்ள பிரைட் ஏஞ்சல் (Bright Angel) என அழைக்கப்படும் பாறை அமைப்பில் இருந்து இந்த மாதிரியை சேகரித்தனர்.
இந்த மாதிரியில் உயிரினங்கள் உருவாவதற்குத் தேவையான கரிம கார்பன் கிடைத்தது. கூடவே, இரும்பு பாஸ்பேட் மற்றும் இரும்பு சல்பைட் நிறைந்த சிறிய புள்ளிகளும் கண்டறியப்பட்டன.
பூமியில், நுண்ணுயிரிகள் கரிமப் பொருளை உண்ணும்போது இந்த ரசாயன கலவைகள் துணை விளைபொருட்களாக உருவாகின்றன.
"இது உயிரினங்கள் இருந்ததற்கான உறுதியான ஆதாரம் என உடனடியாக கூற முடியாது. நுண்ணுயிர் வாழ்க்கை ஒரு சாத்தியமான விளக்கம் மட்டுமே. நாம் காணும் அம்சங்களை உருவாக்க வேறு வழிகளும் இருக்கக்கூடும்" என்று முன்னணி ஆராய்ச்சியாளரான ஜோயல் ஹுரோவிட்ஸ் கூறினார். இருப்பினும், இதுவரையிலான தேடல்களில், பண்டைய கால வாழ்க்கையின் அறிகுறிகளுக்கான மிகவும் உறுதியான மற்றும் வலுவான ஆதாரம் இதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.
விஞ்ஞானி ஜோயல் ஹுரோவிட்ஸ் கூறுகையில், "உயிரினங்கள் இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், வேறு சில இயற்கை நிகழ்வுகளாலும் இது ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது." என்றார்.
இருப்பினும், உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியும் முயற்சியில், ரோவர் இதுவரை சேகரித்த மாதிரிகளில் இதுவே மிகவும் உறுதியானதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ரோவர் இதுவரை 30 மாதிரிகளை சேகரித்துள்ளது, மேலும் ஆறு மாதிரிகளை சேகரிக்க வேண்டும்.
"பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு கோளில் உயிர் வாழ்ந்ததற்கான உறுதியான ஆதாரத்தை நிரூபிப்பது அற்புதமான விஷயம்," என்று ஹுரோவிட்ஸ் கூறினார்.
சேகரிக்கப்பட்ட மாதிரிகள் எதிர்காலத்தில் ரோபோ விண்கலம் அல்லது விண்வெளி வீரர்களால் பூமிக்கு கொண்டு வரப்படும் என நாசா திட்டமிட்டிருந்தது. இருப்பினும், செலவு அதிகரிப்பு காரணமாக, இந்த திட்டம் இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாதிரிகள் பூமிக்கு வந்த பிறகுதான், பண்டைய செவ்வாய் கிரகத்தில் உயிரினம் இருந்ததா என்பது குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியும்.