தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. இந்நிலையில் வாக்காளர் படிவங்களைப் பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு உதவும் வகையில், சென்னை மாநகராட்சியில் நேற்று முதல் வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நவம்பர் 25 ஆம் தேதி வரை இந்த உதவி மையங்கள் செயல்படும்.
இந்நிலையில் பணி நெருக்கடி காரணமாக, வாக்காளர் திருத்தப் பணிகளை நேற்று முதல் வருவாய் துறை சங்கம் புறக்கணித்தது. பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தற்போது சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழ்நாட்டில் ஆறு கோடிக்கும் மேலான வாக்காளர் படிவங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் படிவங்களை வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாங்கி வருகின்றனர். வாக்காளர் படிவங்களை நிரப்புவதற்கு சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ள உதவி மையங்களைப் போலவே, தமிழ்நாட்டின் மற்ற மாநகராட்சிகளிலும் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பணி நெருக்கடி காரணமாக சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளைப் புறக்கணிக்கப்பதாக வருவாய் துறை சங்கம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதன்படி நேற்று பல ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதனை சமாளிக்கும் விதமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது தமிழக அரசு. தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி இந்த சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், “வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான (PLO) ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12000 ஆக உயர்த்தப்படுகிறது. சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்படுவதால், பிஎல்ஒ-க்களின் பணிச்சுமைக்கு தீர்வு கிடைத்திருக்கும் என அரசு நம்புகிறது. தமிழக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, சம்பள உயர்வு குறித்த அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.