

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், தேர்தல் ஆணையம் இதற்கான சரியான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மேலும் ஆன்லைன் வழியாகவும் வாக்காளர் படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வழிவகை செய்தது.
இந்நிலையில் வாக்காளர் படிவங்களைப் பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு உதவும் வகையில், சென்னை மாநகராட்சியில் இன்று முதல் அடுத்த 8 நாட்களுக்கு வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளிலும் உள்ள பொதுமக்கள், உதவி மையங்களை அணுகி வாக்காளர் படிவங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் பணிகள் டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், வாக்காளர் படிவங்களை நிரப்புவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்கிட, சென்னை மாநகராட்சி முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த உதவி மையங்கள் இன்று (நவம்பர் 18) முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 தொகுதிகளிலும் உள்ள 947 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும். வாக்காளர் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் பொதுமக்களுக்கு ஏற்படும் குழப்பங்களை தீர்த்து வைக்கவும், 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற விவரங்களை கண்டறியவும் இந்த உதவி மையங்கள் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி மையங்களுக்கு வரும்போது, துணைக்கு யாரையாவது அழைத்து வரலாம். வாக்காளர் படிவங்களை சமர்ப்பிக்க தேவையான ஆவணங்களை உடன் எடுத்து வர வேண்டியது அவசியமாகும். இந்த உதவி மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணி மிகவும் முக்கியமானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் ஆறு கோடிக்கும் மேலான வாக்காளர் படிவங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் படிவங்களை வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் வாங்கி வருகின்றனர். வாக்காளர் படிவங்களை நிரப்புவதற்கு சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ள உதவி மையங்களைப் போலவே, தமிழ்நாட்டின் மற்ற மாநகராட்சிகளிலும் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணி நெருக்கடி காரணமாக, வாக்காளர் திருத்த பணிகளை புறக்கணிப்பதாக வருவாய் துறை சங்கம் அறிவித்திருப்பது தேர்தல் ஆணையத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.