

மாநிலத்தில் உள்ள திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கற்றல் முறைகளுக்கான ஏற்பாடுகளுடன் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தை நிறுவியது.
இப்பல்கலைக்கழகத்தின் (TNOU) கல்வித் திட்டங்கள், UGC-DEB, NCTE, RCI மற்றும் AICTE ஆகியவற்றால் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்திற்கு UGC-யின் 12B தகுதி வழங்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் கல்விச் செயல்பாடுகள் 2003-04ம் ஆண்டில் தொடங்கப்பட்டன.பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் கல்விக் கல்வி வாரியத்தின் (DEB) ஒப்புதலின்படி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (TNOU) தனது அனைத்து படிப்புகளையும் (வழக்கமான முறையில்) 2017-ஆம் ஆண்டில் தொடங்கியது.
இப்பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறைகள் (கல்வி ஆண்டு மற்றும் காலண்டர் ஆண்டு) நடைபெறும் மாணவர் சேர்க்கைக் கொள்கை, வார இறுதி விடுமுறை நாட்களில் தேர்வுகள், பயனுள்ள தொடர் மதிப்பீடு போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில், அனைத்து பிரிவு மாணவர்களுக்குமான உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பை இப்பல்கலைக்கழகம் சாத்தியமாக்கியுள்ளது. குறிப்பாக, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவில் உள்ளவர்களுக்கும்,பணியில் இருப்பவர்களுக்கும், குடும்பப் பெண்களுக்கும் இப்பல்கலைக்கழக படிப்புகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. மேலும்,இப்பல்கலைக்கழகம் உயர்கல்வியின் தரத்தை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்காக தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களை மாணவர்களின் கல்விநலனுக்காக சிறப்பாக பயன்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் (TNOU) ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளும், வேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய பல்வேறு டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளும் தொலைதூரக்கல்வியின் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றன.
அனுமதிக்கப்பட்ட 105 ஆசிரியப் பணியாளர்கள் மற்றும் 68 ஆசிரியர் அல்லாத பணியாளர்களைக் கொண்டுள்ள இப்பல்கலைக்கழகம், நாட்டிலுள்ள 16 திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில், பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) 12பி தகுதி வழங்கப்பட்ட 6 திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தனித்து நிற்கிறது.
இந்நிலையில்,தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களின் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது கருணையுடன் பரிசீலித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் மற்றும் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பினை உறுதி செய்யும் நோக்கத்துடன், பல்கலைக் கழகத்தின் பல்வேறு தொலைதூரப் படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்புவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இதற்கான அதிரடி உத்தரவினை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் (TNOU) பிறப்பித்துள்ளது. இதன் மூலம் விருப்பமுள்ள மாணவர்கள் கூடுதல் கால அவகாசத்தைப் பெற்றுள்ளார்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்குப் பிடித்தமான பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்க சேர வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகப் பதிவாளர் ஜி.ஆர். செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இச்செய்தியை தெரிவித்துள்ளார்.இந்த வாய்ப்பினை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தகுதியுள்ள நபர்கள் பல்கலைக்கழக இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கற்றல் மையங்கள் மூலம் ஏப்ரல் 13-க்குள் விண்ணப்பித்து தங்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.