

தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அவர் நேற்று டெல்லிக்கு சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் நிலையான ஒரு வெற்றியை பெற முடியாமல் பாஜக தவித்து வந்தபோது, மாநில தலைவராக இருந்த அண்ணாமலை அக்கட்சியை தமிழ்நாட்டில் விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜக-வின் வளர்ச்சி சீராக மேம்பட்டது. ஆனால் மாநில தலைவர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அண்ணாமலை ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர்.
இது தவிர நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. இருப்பினும் கூட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து வந்தார். சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அண்ணாமலைக்கு திருப்தியை அளிக்காத நிலையில், இனியும் பாஜகவில் தொடர்வதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக தனிக்கச்சியை தொடங்க அவர் முடிவு எடுத்துள்ளதாகவும், இந்த முடிவை எடுத்த பிறகே அவர் டெல்லிக்கு சென்றதாகவும் தற்போது அதிரடியான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதன்படி இன்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை அண்ணாமலை சந்திக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வையும் அண்ணாமலை சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பிற்குப் பிறகு அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடைய பிறந்தநாள் ஜூன் 4-ம் தேதியன்று மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அண்ணாமலையை கட்சியில் தக்கவைத்துக் கொள்ள பாஜக மேலிடம் சமாதான முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்படி மீண்டும் தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலையை நியமிக்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு மத்திய அமைச்சர் பதவியும் அண்ணாமலைக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் பாஜக மேலிடம் அளிக்கும் இந்த வாய்ப்பை அண்ணாமலை ஏற்பாரா அல்லது நிராகரிப்பாரா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.