அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கிய சூழலில், இன்று வரை இந்தப் போர் முடிவுக்கு வரவில்லை. அணு ஆயதத் தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டு வருவதால், அதனை நிறுத்தவே அமெரிக்கா இந்தப் போரைத் தொடங்கியது.
இதன் காரணமாக உலக நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சிலிண்டர் உள்பட பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா உடனான போர் குறித்த பேச்சுவார்த்தையை நிறுத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வர உள்ள நிலையில், இதனை நீட்டிக்க இரு நாடுகளும் ஆலோசித்து வருவதாக தகவல் கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் இது குறித்த முடிவை எடுக்க வெள்ளை மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், ஹார்மூஸ் நீரிணையை ஈரான் அரசு மூடியே வைத்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், உலக நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.
அமெரிக்கா - ஈரான் போரை நிறுத்த பாகிஸ்தான் 2 முறை பேச்சவார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டது. இருப்பினும் இந்த முயற்சி தோல்வியில் முடியவே, இனி அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது ஈரான்.
லெபனானில் உள்ள இஸ்புல்லா ஆயுதக் குழு அமைப்பின் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஈரான் வலியுறுத்தி உள்ளது.
ஈரானுக்கு லெபனானில் உள்ள இஸ்புல்லா குழுவும், ஓமனும் ஆதரவளித்து வருகின்றன. கடந்த வாரம் ஈரானுக்கு ஆதரவு அளித்தால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ஓமனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈரானுக்கு ஆதரவளிக்கும் விதமாக இஸ்ரேல் மீது இஸ்புல்லா அமைப்பு தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் லெபனானில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மீது தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதல் தொடர்ந்து நடக்கவே அமைதி பேச்சு வார்த்தையை நிறுத்துவதாக ஈரான் அறிவித்தது.
இஸ்ரேல் மற்றும் இஸ்புல்லா அமைப்பு இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் இஸ்புல்லா அமைப்பு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்கா - ஈரான் போர் குறித்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் ஈடுபடுமா என்பது இனி தான் தெரியவரும்.