

தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி? என்பதை அறிந்து கொள்ளலாம்.
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைப்பற்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் ஆளாக காங்கிரஸ் ஆதரவு கரம் நீட்டியது. அதனை தொடர்ந்து 2 நாட்கள் இழுப்பறிக்கு மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவளித்த நிலையில் தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்தது.
அதனை தொடர்ந்து ஆளுநர் அர்லேகர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்ததுடன், அவரை முதலமைச்சராக நியமித்து ஆணை வழங்கினார்.
இதையடுத்து கடந்த 10-ம்தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார்.
ஆனால் பதவி ஏற்றவுடன் தவெக அரசு தனது பயணத்தை தொடங்கி விடமுடியாது. சில முக்கிய கட்டங்களை கடந்த பிறகுதான் ஆட்சியை தொடங்க முடியும்.
தவெக அரசு நாளை (13-ம்தேதி) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து தற்காலிக சபாநாயகராக மதுரை சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்காலிக சபாநாயகராக எம்எல்ஏ கருப்பையா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முன்னிலையில் பதவி ஏற்றார்.
தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் முதல்வர் விஜய் உள்பட அனைவரும் எம்எல்ஏவாக பதவியேற்றனர். இதையடுத்து தான் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதனையும் கருப்பையா தான் நடத்த உள்ளார்.
இன்றோ அல்லது நாளையோ (13-ம்தேதிக்குள்) தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படும்.
இந்த தீர்மானத்தை ஆளும் கட்சியில் இருந்து ஒருவர் முன்மொழிய அதன் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றி அனைவரது நம்பிக்கையையும் கோருவார். அதில் எதிர்க்கட்சியினரும் உரையாற்றுவார்கள்.
அதன் பிறகு அந்த தீர்மானம் எம்எல்ஏக்களின் வாக்கெடுப்புக்கு விடப்படும். எதிர்க்கட்சியினர், எண்ணி கணிக்கும் டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று கேட்டால் அந்த வாககெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட வேண்டும். அவைக்கு வெளியே எம்எல்ஏக்கள் சென்றிருந்தால் அவர்களை அவைக்குள் வர செய்வதற்கான மணியோசை 3 முறை ஒலிக்கப்படும்.
அதன் பின்னர் அவையின் கதைகளும் அடைக்கப்படம். பின்னர் சட்டசபை செயலாளர், டிவிஷன் வாக்கெடுப்பை நடத்துவார். ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள (மொத்தம் 6 டிவிஷன்) எம்எல்ஏக்களிடம் சட்டசபை செயலாளர் தீர்மானத்தை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் தனித்தனியாக எழுந்து நிற்க கூறுவார். (முதலமைச்சர் முதல் டிவிஷனில் இருப்பார், அவருக்கு நேர் எதிரேயுள்ள 6-ம் டிவிஷினில் எதிர்க்கட்சித் தலைவர் இருப்பார்)
அதனை தொடர்ந்து அரசு மீது நம்பிக்கை கோரும், தீர்மானத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கையையும், எதிர்போரின் எண்ணிக்கையும் கணக்கிட்டு சபாநாயகரிடம் செயலாளர் வழங்குவார். அதன்படி வெற்றி, தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார்.
இந்த பெரும்பான்மை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து பணியை நடத்தும். ஒருவேளை தீர்மானம் தோற்றுவிட்டால் அது ஆளுநருக்கு தெரிவிக்கப்படும். பெரும்பான்மையை அரசு நிரூபிக்க தவறிவிட்டதால் அரசு கலைப்படுவதாக ஆளுநர் உத்தரவிடுவார்.
தவெக அரசுக்கு தேவையான பெரும்பான்மை ஒன்றிரண்டு ஓட்டுகளில் ஒட்டிக்கொண்டிருந்தால் ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் அனைத்து எம்எல்ஏக்களும் அன்று தவறாமல் வாக்கெடுப்புக்கு அவைக்கு வருவது மிகமிக அவசியமாகும்.
அந்த வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தோற்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை வரும். வென்றால் மட்டுமே அவரால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.