கை கொடுப்பாரா திருமா..? பெரும்பான்மை நிரூபிக்க தவெக-விற்கு இன்னும் 2 இடங்கள் தேவை..!

திமுக அரசு கொண்டு வந்த நலத் திட்டங்களை தவெக தொடர வேண்டும் என்பதற்காக தான் விஜய் ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ள இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
விஜய்
விஜய்
Updated on

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவாக அரசியலுக்கு வந்து சந்தித்த முதல் தேர்தலிலேயே தவெக 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதாவது வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட விஜயின் தவெக கட்சி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களைக் கைப்பற்றியது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை எட்ட, இக்கட்சிக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாகவே உள்ளன. இதனால் தவெக அந்த கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வந்தது.

தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார். ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ளலாம் என்று தவெக கருதிய நிலையில் கவர்னர் அழைக்கவில்லை. அவர் பெரும்பான்மைக்கான எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

118 எம்எல்ஏக்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கோட்டையை பிடிக்க விஜய் கையாளப்போகும் 'மாஸ்டர் பிளான்' என்ன?
விஜய்

இதில் காங்கிரஸ் முதல் ஆளாக திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தவெகவிற்கு ஆதரவை வழங்கியது. தவெகவுக்கு காங்கிரசின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து எம்எல்ஏக்களின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் ‘மேஜிக்’ நம்பரான 118-ஐ தொடாததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து தடை ஏற்பட்டு வந்தது. ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற கடந்த 2 நாட்களாக மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரி வந்தது.

இந்நிலையில், சிபிஐ, சிபிஎம், உள்ளிட்ட இடதுசாரிகள், 2 இடங்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்தன.

தவெகவிற்கு ஆதரவு அளித்தது குறித்து கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் ஆட்சி நடைபெறுவதை தவிர்க்கவே தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளோம் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், திமுக அரசு கொண்டு வந்த நலத் திட்டங்களை தவெக தொடர வேண்டும் என்பதற்காக தான் விஜய் ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ள இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தவெக ஆட்சிக்கு வரவுள்ள நிலையில் திமுக அரசின் நலத் திட்டங்கள் தொடருமா என மக்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள இந்தக் கட்சிகள் திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எம்ஜிஆர் உடன் கூட்டணி சேர்ந்து அவர் ஆட்சி அமைக்க காரணமாய் இருந்த கம்யூனிஸ்ட் மீண்டும் 2026-ம் ஆண்டு விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசியலில் ‘கிளைமாக்ஸ்’..!பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் எடுக்கும் அதிரடி வியூகம்..!
விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது ஆட்சி அமைப்பதற்கான 'மேஜிக் நம்பர்' 118-ஐ எட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் (5), சிபிஐ (2), மற்றும் சிபிஎம் (2) ஆகிய கட்சிகள் தங்களின் ஆதரவை உறுதி செய்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு தற்போது மொத்தம் 116 சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் உள்ளது. எனினும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐயூஎம்எல் (IUML) கட்சியிடம் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் தவெக-விற்கு ஆதரவு அளிக்க மறுத்துவிட்டதால், ஆட்சி அமைப்பதில் சிறு இழுபறி நீடிக்கிறது.

இந்த இக்கட்டான சூழலில், தவெக ஆட்சியின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற அவசர காணொளி காட்சி கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் விஜய்க்கு ஆதரவு அளிப்பதே சரியாக இருக்கும் என்று தங்கள் கருத்துக்களை முன்வைத்ததாக தெரிகிறது. கோட்டையில் தவெக கொடி பறக்க இன்னும் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படும் நிலையில், விசிக-வின் இந்த உள்மட்ட விவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து விசிக தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருமாவளவன் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைக்கும் பட்சத்தில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான பெரும்பான்மை (118 இடங்கள்) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதையும், புதிய அரசு எப்போது அமையும் என்பதையும் திருமாவளவன் எடுக்கப்போகும் அந்த ஒரு 'சிக்னல்' தான் தற்போது தீர்மானிக்க உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com