

உலக வெப்பமயமாதல் காரணமாக உலகளாவிய வானிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் 2 முக்கிய நிகழ்வுகள் ‘லாநினோ’ மற்றும் ‘எல்நினோ’.
இவற்றில் லாநினோ இந்தியாவிற்கு மழையை கொடுக்கும். எல்நினோ வறட்சியை கொடுக்கும். இவை இரண்டும் இயற்கையாகவே நடக்கும் சுழற்சிகள் என்றாலும், தற்போதைய உலக வெப்பமயமாதல் காரணமாக இவற்றின் தீவிரம் மற்றும் கணிக்கமுடியாத தன்மை அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் தற்போது நம்மை அச்சுறுத்த வருவதுதான் எல்நினோவின் அடுத்த பரிமாணமான ‘சூப்பர் எல்நினோ’.
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடலின் மேற்பரப்பு நீர் வழக்கதை விட அதிகமாக வெப்பமடைவதையே ‘எல்நினோ’ என்று அழைக்கிறோம். அதுவே கடல் மேற்பரப்பு நீர் மிக்கடுமையான அளவில் வெப்பமடையும் போது அது ‘சூப்பர் எல்நினோ’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது இயல்பை விட கடலின் வெப்பநிலை 2 செல்சியஸ் முல் 3 செல்சியஸ் வரை அல்லது அதற்கு மேல் அதிகரிப்பதைத்தான் சூப்பர் எல்நினோ என்கிறார்கள்.
இன்னும் சுருக்கமான சொல்வதென்றால், என்நினோ ஒரு சாதாரண காய்ச்சல் போலவும், சூப்பர் என்நினோ கடுமையான தீவிர காய்ச்சல் போலவும் நினைத்துக்கொள்ளுங்கள்.
வரும் ஜூலை மாதத்தில் என்நினோ உருவாகி, அது சூப்பர் எல்நினோவாக வரும் அக்டோபர் மாதத்தில் மாறுகிறது.
இதனால் இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் என்ன முகத்தை காட்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க..
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த சூப்பர் எல்நினோ முதலில் இயற்கையின் கொடையான மழையை தான் பாதிக்க இருக்கிறது. அதாவது 2026-ம் ஆண்டின் ஜூன் முதல் செப்டம்பர் வரையில் பெய்யகூடிய தென் மேற்கு பருவமழை இந்த சூப்பர் எல்நினோ தாக்கத்தால் குறைவாக பெய்யும்.
தென் மேற்கு பருவமழைதான் இந்தியாவின் பெரும்பாலான இடங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது. அந்த வகையில் வட இந்திய மாநிலங்களில் மழை பொய்த்து போகவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள தெரிவிக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமானால் சூப்பர் எல்நினோ ஆண்டின் தென்மேற்கு பருவமழை பலவீனப்படும். இதனால் விவசாயம் பாதிக்கப்படும். இந்திய விவசாயம் 70 சதவீதம் தென்மேற்கு பருவமழையை நம்பிதான் இருக்கிறது. குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் பயிரிடப்படும் நெல், சோளம், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துக்கள் போன்ற காரிய பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
விவசாய உற்பத்தி குறையும் போது அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரையின் விலை சந்தையில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் உணவு பணவீக்கதை ஏற்படுத்தலாம் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மழை குறைவால் கால்நடைகளுக்கான பசுந்தீவன பொருட்கள் பற்றாக்குறையும் ஏற்படலாம்.
இதுமட்டுமில்லாமல் வழக்கதை விட முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். வெப்ப அலைகள் வீசும். இது இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் உணர தொடங்கிவிட்டோம். வெப்ப அலை தாக்கத்தால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருப்பதை செய்திகளில் தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக இனிவரும் நாட்களில் நீர் நிலைகள் வற்றி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளா, கர்நாடகா உள்பட தென் இந்திய பகுதிகளில் மழை குறையும். இதனால் மேட்டூர், முல்லை பெரியாறு, பவானி சாகர், அமராவதி, தென் பெண்ணை உள்ளிட்ட அணைகளில் போதுமான நீர்வரத்து இல்லாமல் அணை நிரம்பாமல் போய்விடும் அபாயமும் உள்ளது.
ஜூலை மாதம் எல்நினோ உருவாகி அது அக்டோபர் மாதத்தில் சூப்பர் எல்நினோவாக மாற இருப்பதால் தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் மாதம் இறுதி வரை கோடை வெப்பம் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.
வழக்கமாக மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை சில நேரங்களில் ஜூன் முதல் வாரம் வரை கூட நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு கோடை வெப்பம் செப்டம்பர் வரை செல்வதற்கு இந்த சூப்பர் எல்நினோ தான் முக்கிய காரணமாக மாறிபோய் உள்ளது. அதிலும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை 41 செல்சியஸ் முதல் 42 செல்சியஸ் வரை உயரக்கூடும். அதாவது 105.8 டிகிரி முதல் 107.6 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சூப்பர் எல்நினோ அடுத்த ஆண்டு (2027) ஜூன் வரை நீடிக்கும்.
அந்த வகையில் சூப்பர் எல்நினோ தமிழ்நாட்டுக்கு 3 விதமான சவால்களை கொடுக்க இருக்கிறது.
அதாவது தென்மேற்கு பருவமழை குறைந்து காவிரியில் நீரின் அளவு குறையும். டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் மளமளவென சரியும். சென்னை போன்ற பெருநகரங்களில் ஏரிகள் வறண்டு ‘ஜீரோ டே’ அதாவது தண்ணீர் இல்லாத நிலை ஏற்படலாம் என்றெல்லாம் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையே ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அமைப்பான உலக வானிலை அமைப்பு (WMO), வரவிருக்கும் எல் நினோ வரும் மாதங்களில் தீவிர வானிலை அபாயத்தை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறமிருக்க வடகிழக்கு பருவமழை அப்படியே நேர் எதிராக கடலோர மாவட்டங்களில் பெரும் வெள்ளத்தை கொண்டு வர இருக்கிறது. ஆக வறட்சி மற்றும் வெள்ளம் என 2 சாவல்களை தமிழ்நாடு சந்திக்க இருக்கிறது.
இதற்கு முன்பு சூப்பர் எல்நினோ ஆண்டில் அதாவது 1972, 1982, 1997, 2015-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பெருவெள்ளம் சூழ்ந்து மிரட்டியது. இவையெல்லாம் சூப்பர் எல்நினோ உச்சத்தில் இருக்கும் போது ஏற்பட்ட நிகழ்வுகள்தான்.
அதிலும் 2015-ல் சென்னையை புரட்டி போட்ட வெள்ளம் இன்றும் சென்னைவாசிகளுக்கு ஒருவித அச்சத்தையே கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை மக்கள் அந்த அச்சத்தை உணருவார்கள்.
அந்த வகையில் இந்தாண்டு சூப்பர் எல்நினோ ஆண்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன விளைவுகள் ஏற்படுமென்று.....