பல நேரங்களில் திருடர்கள் தங்களின் முட்டாள் தனத்தினால் மாட்டிக் கொள்கின்றனர். பல திருடர்கள் திருடச் சென்ற வீட்டில் படுத்து தூங்கி, வீட்டுக் காரர்கள் வரும் போது மாட்டிக் கொண்டுள்ளனர். சிலர் குடி போதையில் அந்த வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு, அங்கேயே போதையில் தூங்கியும் விடுகின்றனர். போதை தெளியும் போது கம்பிகளுக்கு பின்னால் காவல் துறையினர் கவனிப்பில் இருக்கின்றனர். இப்படி சில சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளன.
கடந்த டிச.28 சனிக்கிழமை அன்று,
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ரேவாரி மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் பேங்கில் நிறைய பணத்தினை கொள்ளையடிக்க கொள்ளையர்கள் திட்டமிட்டிருந்தனர். கொள்ளையடிக்க போவது வங்கி என்பதால் இம்முறை பெரிய அளவில் பணத்தினை கொள்ளையடித்து, செட்டில் ஆகும் எண்ணம் இருந்திருக்கும். அவர்களின் திட்டப்படி நகரம் முழுக்கவும் தூங்கிய பின்னர் நள்ளிரவில் தங்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
வங்கியின் கிரில்கள், ஜன்னல் கம்பிகளை அறுத்து, அதனுள் திருடர்கள் நுழைந்துள்ளனர். அதன் பின்னர் பணமும் நகையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் லாக்கர் ரூமிற்குள் நுழைய முயன்றுள்ளனர். அதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்க வில்லை. புத்திசாலி திருடர்கள் தாங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்துள்ளனர். கிடைத்த வரை ஆதாயம் என்று வங்கியில் இருந்த பிரிண்டர்கள், பேட்டரிகள் மற்றும் டிவிஆர் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
திருடர்களின் லாக்கர் உடைக்கும் பணி தோல்வியுற்ற வேளையில் அவர்களின் கண்களின் ஒரு ஜாக்பாட் தென்பட்டது. இந்த மெஷினை கொள்ளையடித்து சென்றால் உள்ளே எப்படியும் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என்று நினைத்து, உடனடியாக ATM மெஷின் போல உருவம் கொண்ட அந்த எந்திரத்தை தூக்கிக் கொண்டு சென்றுவிட்டனர்.
மறுநாள் காலையில் விடிந்ததும் அப்பகுதி உள்ளூர் மக்கள் வங்கியின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கு கொள்ளை சம்பவம் அரங்கேறியதை அறிந்த ஊர் மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து வங்கியின் சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
காவல்துறையினர் தீவிர விசாரணையின் அடிப்படையில் திருடர்கள் பதுங்கி இருக்கும் இடத்தினை கண்டறிந்தனர். காவல்துறையினர் தீவிரமாக தேடுவதை அறிந்த அந்த திருட்டுக் கும்பல் தலை மறைவானது. திருடர்கள் தங்கியிருந்த இடத்தினை காவல்துறையினர் கைப்பற்றினர். அவர்களின் இடத்தினை ஆராய்ந்ததில் காவல்துறையினர் சில பொருட்களை கைப்பற்றினர். அப்போது காவல்துறைக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த பலே திருடர்கள் ஏ.டி.எம் மெஷின் என்று நினைத்து பாஸ்புக் பிரிண்டரை திருடியுள்ளனர். மேலும் அந்த இடத்தில் கம்ப்யூட்டர் பிரிண்டர்கள் பேட்டரியையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.
மிகவும் ரிஸ்க் எடுத்து பேங்கை கொள்ளையடித்து ஏடிஎம் மெஷின் என நினைத்து பாஸ்புக் பிரிண்டரை திருடிய திருடர்களின் முட்டாள்தனத்தை நினைத்து ஹரியானா மக்களே சிரிக்கின்றனர்.
இது போன்றே ஏடிஎம் மெஷினை கொள்ளையடிக்க சென்று பிரிண்டர் மெஷினை திருடியது அஸ்ஸாமிலும் கொல்கொத்தாவிலும் ஒருமுறை நடந்துள்ளது என்பது கூடுதல் தகவல்!