தமிழகத்திலும் அதிக குழந்தைகள் பெற ஊக்கத்தொகையா? அமைச்சர் அறிவிப்பு..!

அரசு மருத்துவமனைகளில் பிறப்பு விகிதத்தை உயர்த்த 'தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம்'!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்source:hindu
Updated on

ஒரு நாட்டின் வளம் என்பது அந்நாட்டின் மக்கள் தொகையிலும் அடங்கும். மக்கள் பெருக்கம் அதிகமெனினும் வாழ்வாதாரத்தில் சிக்கல்.. குறைவு என்றாலும் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாகவே ஒவ்வொரு நாடும் மக்கள் தொகையின் மீது கவனமாக இருக்கும்.

தற்போது தமிழ்நாடு அரசும் குழந்தை பிறப்புகளில் தனது கவனத்தை அதிகரித்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பின் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம்’ செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் தகுதியுள்ள ஏழை எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மூலமாகத் தொடர்ந்து நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் "தம்பதியினர் எப்படி அதிக குழந்தைகள் பெற ஊக்குவிப்பது என்ற சிந்தனைகள் வரும் காலங்களில் வரலாம் .ஆந்திராவில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியருக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை கொடுக்கும் திட்டங்கள் இருக்கிறது .வரும் காலங்கள் அந்த மாதிரி கூட இருக்கலாம் என கூறியுள்ளார்

ஆந்திராவில் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்வோருக்கு புதிய மக்கள் தொகை மேலாண்மை கொள்கையின் கீழ் ரூ.30,000 மற்றும் நான்காவது குழந்தைக்கு ரூ.40,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்துள்ளார். இந்த ஊக்கத்தொகை தாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆந்திராவில் பிறப்பு விகிதம் குறைந்து, எதிர்காலத்தில் இளைஞர்கள் மற்றும் வேலை செய்யக்கூடிய வயதினரின் எண்ணிக்கை குறைந்து, முதியோர் மக்கள் தொகை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எனவே, முன்பு வலியுறுத்தப்பட்ட மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கு மாறாக தற்போது மக்கள் தொகை மேலாண்மை என்ற அணுகுமுறையை இந்த அறிவிப்பு மூலம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் மே மாத அறிவிப்பில் தொகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அப்போது திட்டத்தின் முழுமையான தகுதி விதிமுறைகள் மற்றும் நடைமுறை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவின் இந்த முடிவை “மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும்” என்ற ஒரே நோக்கில் மட்டும் பார்க்க முடியாது. என்றும் தென் மாநிலங்களில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், எதிர்காலத்தில் இளைஞர்கள் மற்றும் வேலை செய்யும் வயதினரின் எண்ணிக்கை குறைந்து, முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற கவலை இதன் பின்னணியில் உள்ளதாகவும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக ஆந்திராவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) கடந்த சில தசாப்தங்களில் கணிசமாகக் குறைந்துள்ளது. சமீபத்திய தரவுகளில் இது சுமார் 1.4 எனக் குறிப்பிடப்படுகிறது. மக்கள் தொகை தன்னைத் தானே மாற்றிக்கொள்ள வேண்டிய மாற்று நிலை 2.1 (replacement level 2.1) ஆகும்.

இதனால் எதிர்காலத்தில் வேலைக்குச் செல்லும் வயதினர் குறைதல், முதியோர் மக்கள் தொகை அதிகரித்தல், தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என ஆந்திர அரசு கருதுகிறது.

இதனால்தான் முன்பு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய கொள்கைகளுக்குப் பதிலாக, தற்போது மக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கள் தொகையை சமநிலையில் வைத்திருக்கும் அணுகுமுறை நோக்கி ஆந்திரா செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் குறைந்த பிறப்பு விகிதம் இருந்தாலும் பிறப்பு விகிதத்தை உயர்த்த ஊக்குவிப்பு3-வது குழந்தைக்கான இதுபோன்ற ரொக்க ஊக்கத்தொகை திட்டம் இதுவரை இல்லை . சமீபத்திய விவாதங்களில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் கருவுறுதல் விகிதம் மிகவும் குறைந்துள்ளதாக உச்சநீதிமன்றமும் குறிப்பிட்டுள்ளது.

ஆந்திராவைப் போலவே தென் மாநிலங்களில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது ஒரு பொதுவான பிரச்சினையாக உருவாகியுள்ளது. இதனால் “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்ற பழைய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதாவது முன்பு மக்கள் தொகை பெருக்கம் காரணமாக 2 குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என்ற கொள்கை பேசப்பட்டது. பிறப்பு விகிதம் ஏற்கனவே குறைந்துள்ள நிலையில், முதியோர் மக்கள் தொகை மற்றும் எதிர்கால தொழிலாளர் தேவையை எப்படி சமாளிப்பது?” என்ற கேள்வியும் எழுகிறது.

இப்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் எதிர்காலத்தில் போதுமான இளைஞர்கள் கொண்ட மக்கள் தொகை இருக்க வேண்டும் என்பதற்காகவே அதிக குழந்தைகள் பெறுவதற்கு ஊக்கமளிப்பது குறித்து பேசப்படுகிறது.

அமைச்சர் அருண்ராஜ்
அமைச்சர் அருண்ராஜ்source:dinamalar

தென்னிந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கு, சென்னையில் தொடங்கியது. இதில் பங்கேற்ற, அமைச்சர் அருண்ராஜ் அளித்த பேட்டி:

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில், ஒவ்வொரு ஆண்டும், பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 2017 - 18ம் நிதியாண்டில், 65.8 சதவீதமாக இருந்த பிறப்பு விகிதம், தற்போது, 51 சதவீதமாக குறைந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவே, 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் கருவுறுதல் விகிதம், 2.1ல் இருந்து 1.4 ஆக குறைந்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த சமூகம், கொஞ்சம், கொஞ்சமாக, முதுமை அடைந்து வருகிறது. 66 வயதிற்கு மேல், 16 சதவீதம் பேர் உள்ளனர். எனவே, தம்பதியர் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே சமயம் 3-வது குழந்தைக்கு ஊக்கத்தொகை வழங்கினால் மூன்றாவது குழந்தை பெற விரும்பியும் பொருளாதார காரணங்களால் தயங்கும் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கலாம், எதிர்கால தொழிலாளர் எண்ணிக்கையை பாதுகாக்கலாம், குடும்பங்களின் குழந்தை வளர்ப்பு செலவை ஓரளவு ஈடுகட்டலாம், இளைய தலைமுறை எண்ணிக்கை அதிகரித்தால், முதியோர்–வேலை செய்யும் வயதினர் விகிதத்தில் ஏற்படும் அழுத்தம் ஓரளவு குறையலாம் போன்ற நன்மைகள் உள்ளது.

ஆனால் . ₹30,000/₹40,000 மட்டும் குழந்தை பெறும் முடிவை மாற்றுமா என்ற கேள்வியும் எழுகிறது. நகர்ப்புற குடும்பங்களில் வீட்டு வாடகை, கல்வி, மருத்துவம், குழந்தை பராமரிப்பு போன்ற செலவுகள் அதிகம். ஒருமுறை வழங்கப்படும் தொகை மட்டும் போதுமான ஊக்கமாக இருக்காமல் இருக்கலாம்.பெண்கள் மீது மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சமூக அல்லது குடும்ப அழுத்தம் உருவாகக்கூடாது. ஏழை குடும்பங்கள் பணம் பெறுவதற்காக குடும்பங்கள் தங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு குழந்தைகள் பெறும் அபாயம் இருக்கலாம். எனவே வருமானம், குழந்தைகளின் நலன் போன்ற அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினால், ஆண்டுதோறும் கணிசமான அரசு செலவு ஏற்படும். அதே பணத்தை குழந்தை பராமரிப்பு, பள்ளிக் கல்வி, ஊட்டச்சத்து, பெண்களுக்கான வேலைவாய்ப்பு போன்றவற்றில் செலவிடுவது அதிக பலன் தரும் என்பதும் ஒரு சாராரின் கருத்து.

எனவே எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும் இது போன்ற ஊக்கத்தொகை திட்டங்களை அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளது என்றாலும் “3-வது குழந்தைக்கு மட்டும் பணம்” என்பதைக் காட்டிலும், குடும்பங்களுக்கு குழந்தை வளர்ப்பை எளிதாக்கும் முழுமையான கொள்கை பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இன்னும் 30 ஆண்டுகளில் தமிழ் சமூகமே அழியலாம்..! பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்
logo
Kalki Online
kalkionline.com