பக்தர்களுக்கு எச்சரிக்கை..! திருச்செந்தூர் கோவிலில் இதை செய்யவே கூடாது..!!மீறினால் வழக்கு பதிவு..!
தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் (Tiruchendur Subramanya Swamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இந்த கோவில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படும் இந்த கோவில், முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரே கோவில் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் இந்த கோவிலுக்கு செல்வோர் சிலர் ரீல்ஸ் மோகத்தில் அங்கிருந்து வீடியோ எடுத்து ரீல்ஸாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்ஸ் பெறுவது அதிகரித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, திருச்செந்தூர் முருகன் கோவில் பகுதிகள் மற்றும் வளாகத்தில் ட்ரோன் கேமரா பறக்க விடவும், செல்போன் அல்லது வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி யாராவது ட்ரோன் பயன்படுத்தினால் அவை பறிமுதல் செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி கோவிலை வீடியோ எடுப்பது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என்பதால், இந்த தடை அவசியமானது என நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
அதேபோல், கோவில் வளாகத்தில் அல்லது கோவில் பகுதிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடி நடனமாடுதல், அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்தல் போன்ற செயல்களும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பவர்களின் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இந்த தடை உத்தரவு சில மாதங்களுக்கு முன்பு கோவில் உள் பிரகாரத்தில் ஒரு இளம் பெண் திரைப்படப் பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக எடுத்து அது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது மத உணர்வுகளை புண்படுத்தும் செயல் எனக் கூறிய நிலையில் அமல்படுத்தப்பட்டது.
இந்த தடை உத்தரவு குறித்த அறிவிப்பு பலகை திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களான சண்முக விலாச மண்டபம், உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், வசந்த மண்டபம், தரிசன வரிசை, அன்னதானக் கூடம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பதாகைகளில், ‘இத்திருக்கோவில் வளாகத்தில் திரைப்படப் பாடல்களை பாடி நடனம் ஆடுவது, அதை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுதல் போன்ற செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம். மேற்படி கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் மற்றும் வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுக்கும் பட்சத்தில் செல்போன் அல்லது வீடியோ கேமரா பறிமுதல் செய்யப்பட்டு ரீல்ஸ் எடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்’ என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த விதிகளை பின்பற்றி, கோவிலை புனித இடமாக பராமரிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 1-ம் தேதி தைப்பூச விழாவின்போது பக்தர்கள் அதிகளவில் கோவிலில் கூடுவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ட்ரோன் பறக்க விடவும், செல்போன் மற்றும் கேமராவில் ரீல்ஸ் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தடைகள், திருப்பதி, காளஹஸ்தி போன்ற பிற கோவில்களிலும் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில் தற்போது திருச்செந்தூர் கோவிலிலும் இந்த புதிய உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பது, சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

