.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
கேரளாவில் கடந்த ஆண்டில் இருந்தே மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. இதனால் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டில் மட்டும் மூளை அமீபா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நோய்க் கட்டுப்பாட்டு முறைகளை தீவிரமாக பின்பற்ற கேரள அரசு முன்வந்துள்ளது. அதோடு பொதுமக்களுக்கும் மூளை அமீபா தொடர்பான விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.
'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' எனப்படும் மூளை அமீபா பாதிப்பு கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தீவிர தடுப்பு முறைகளைப் பின்பற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கோழிக்கோடு, திருவனந்தபுரம், மலப்புரம், வயநாடு மற்றும் கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது புதிதாக 18 பேருக்கு மூளை அமீபா நோய் கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் நடப்பாண்டில் மட்டும் இந்நோய்க்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
மூளை அமீபா நோய் பெரும்பாலும் தண்ணீர் மூலமாகவே பரவுகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கிணறுகள், குளங்கள், ஆறுகள் மற்றும் சுத்தம் செய்யப்படாத தொட்டிகளை சுத்தம் செய்ய கேரள அரசு முன்வந்துள்ளது. இதற்காகவே தண்ணீர் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக போராட ‘ஜலமான் ஜீவன்’ என்ற பிரச்சாரத்தை கேரள அரசு முன்னெடுத்துள்ளது. இந்தப் பிரச்சாரத்தில் பொதுக் கல்வித் துறை, மாநில சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஹரித் கேரளம் மிஷன் போன்ற அமைப்புகள் இணைந்து செயலாற்றுகின்றன.
ஜலமான் ஜீவன் பிரச்சாரத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள், குளங்கள் மற்றும் ஆறுகளில் உள்ள தண்ணீரை குளோரினேட் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வீடுகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள தண்ணீர்த் தொட்டிகள் சுத்தம் செய்யப்படவுள்ளன. மூளை அமீபா மட்டுமின்றி தண்ணீர் மூலம் பரவும் அனைத்து நோய்களையும் தடுக்க இந்தப் பிரச்சாரம் பயனுள்ளதாக அமையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் இந்த வகையான அமீபா இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளதால், ஜலமான் ஜீவன் பிரச்சாரத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு அதிகளவில் இருக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.