புத்தாண்டையொட்டி முதல்வர் பெயரில் மூன்று மாதம் ஃப்ரீ ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதாக சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் உண்மையான செய்திகளைவிட நிறைய வதந்திகள்தான் வருகின்றன. குறிப்பாக இந்த லிங்க் உள்ளே போனால், இலவச போன், இலவச ரீசார்ஜ் போன்றவை செய்துக்கொள்ளலாம் என்றுதான் செய்திகள் வருகின்றன. இதனை நம்பி லிங்க் உள்ளே போனால், தெரியாமல் எதோ பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. மேலும், லிங்க்’ வாயிலாக உள் நுழையும் பொது மக்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை களவாடி விடுகின்றனர்.
இதை தடுக்க அவ்வப்போது மத்திய மாநில அரசுகள், காவல்துறையினர் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கட்டுப்படுத்துவதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
சமீபத்தில்தான் பிரதமர் மோடியின் பெயர் வைத்து அரசு திட்டங்களை குறிப்பிட்டு இதுபோன்ற மோசடி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது முதல்வர் ஸ்டாலின் பெயரிலும் ஒரு குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது அந்த செய்தியில், ‘புத்தாண்டு ரீசார்ஜ் சலுகை’ என்ற தலைப்புடன், ‘புத்தாண்டையொட்டி ஸ்டாலின் அனைவருக்கும், 2 மாத ரீசார்ஜ், 749 ரூபாய் முற்றிலும் இலவசம் எனக் குறிப்பிட்டு, ஒரு ‘இணைய லிங்க்’ வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற லிங்கில் உள்ளே போகும்போது மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து பணம் திருடுகிறார்கள். ஆகையால், இதுபோன்ற லிங்கைத் தொட வேண்டாம் என்று சைபர் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.
முன்பும் இதுபோன்ற லிங்குகள் வரும். அதாவது இந்த வீலை சுற்றினால், எந்த பொருள் உங்களுக்கு வருகிறதோ அதை வெல்லுங்கள் என்றும், இலவச லேப்டாப் திட்டம் என்றெல்லாம் வரும். ஆனால், அப்போது அந்த லிங்கை ஷேர் செய்ய சொல்லி, அது எத்தனை முறை ஷேர் ஆகிறதோ அவ்வளவு வருமானம் பெற்றுக்கொள்வது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது ஜிபே, பேடிஎம் போன்ற வசதிகள் வந்தவுடன், மொபைல் எண் மூலமே திருட்டு மோசடிகள் நடக்கின்றன. எனவேதான் மக்களை அவ்வப்போது சைபர் க்ரைம் போலீஸார்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.