உணவுப் பாலைவனங்கள் என்பது பல்வேறு ஆரோக்கியமான, சத்தான உணவுகள் கிடைக்காத பகுதிகளைக் குறிக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் சத்தான புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்காமல் துன்புறுவார்கள். அவர்களுக்கு மலிவு விலையில் காய்கறிகளும் பழங்களும் கிடைக்காது. உணவுப் பாலைவனங்கள் பற்றிய முக்கிய அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
உணவுப் பாலைவனங்கள் இருக்கும் இடங்கள்: நகர்ப்புறங்களின் எல்லைகளில் வசிப்பவர்களுக்கு அருகில் பல்பொருள் அங்காடியோ மளிகைக் கடைகளோ அதிகமாக இருக்காது. அவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்குவதற்கு மிக நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டி இருக்கும். புறநகர் மற்றும் கிராமப்புறங்களிலும் பொது போக்குவரத்து குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் பல்பொருள் அங்காடிகள் ஏழை மக்களின் வீடுகளில் இருந்து பல மைல்கள் தொலைவில் உள்ளன.
உணவுப் பாலைவனங்கள் பற்றிய முக்கிய அம்சங்கள்:
குறைந்த அளவிலான மளிகைக் கடைகள்: உணவுப் பாலைவனத்தில் புதிய பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுகளை விற்கும் மளிகைக் கடைகள் குறைவாக இருக்கும் அல்லது ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் இல்லாமல் இருக்கும். பெரும்பாலும் மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் குப்பை உணவுகளை விற்கும் பெரிய கடைகள் மற்றும் துரித உணவு உணவகங்கள் மட்டுமே அருகில் இருக்கும்.
போக்குவரத்து சிக்கல்கள்: உணவுப் பாலைவனங்களில் வசிக்கும் மக்களில் பலருக்கு கார்கள் இல்லாமல் இருக்கும் அல்லது பொது போக்குவரத்து வசதி இல்லாமல் இருக்கும். அதனால் சரியான உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்படுவார்கள். அவர்கள் புதிய ஆரோக்கியமான உணவை விற்கும் கடைகளை அடைய நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். கார்கள் அல்லது பொது போக்குவரத்து இல்லாதவர்களுக்கு இது மிகவும் கடினமான காரியம் ஆகும்.
குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள் உள்ள பகுதிகள்: உணவுப் பாலைவனங்கள் பெரும்பாலும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் காணப்படுகின்றன. அங்கு மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்குவதற்கு போதுமான பணம் இல்லாமல் இருப்பார்கள்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகள்: உணவுப் பாலைவனங்கள் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் என இரண்டிலும் இருக்கலாம். நகரங்களில், புறநகரில் வசிக்கும், கீழ்மட்ட, மத்திய தர வர்க்க மக்கள் வசிக்கும் பகுதிகள் கடைகளில் இருந்து வெகுதொலைவில் இருக்கும். அதேபோல, கிராமப்புறத்தில், உணவு பாலைவனங்கள் மளிகைக் கடைகளில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் சமூகங்களில் இருக்கலாம்.
சுகாதாரச் சிக்கல்கள்: ஆரோக்கியமான உணவை உண்ணாததால் அல்லது கிடைக்காததால் அங்கே மக்கள் மோசமான உணவு முறைகளை கொண்டிருப்பார்கள். இதனால் அவர்களுக்கு ஆரோக்கியக் கேடு உண்டாகி உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்ற உடல்நிலை பிரச்னைகளுக்கு ஆளாகி இருப்பார்கள்.
பொருளாதாரக் காரணங்கள்: இந்த உணவுப் பாலைவனங்கள் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் 20 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் வறுமையில் வாடும் அல்லது சராசரி குடும்ப வருமானம் கொண்ட மக்களைக் கொண்டிருக்கும்.
உணவுப் பாலைவனங்கள் உண்டாகும் காரணங்கள்:
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்: பெரிய பல்பொருள் அங்காடிகள் பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் உள்ள பகுதிகளைத் தவிர்க்கின்றன. ஏனென்றால், அவர்களுக்கு அங்கே குறைந்த லாபம் மட்டுமே கிட்டும். எனவே, ஏழை மக்கள் இருக்கும் பகுதிகளில் அங்காடிகள் குறைவாகவே இருக்கும்.
மோசமான நகர்ப்புற திட்டமிடல்கள்: நகர்ப்புற திட்டமிடல்கள் குறைந்த வருமானம் கொண்ட மக்களின் தேவைகளை புறக்கணிக்கின்றது. எனவே, இந்த பகுதிகளில் அத்தியாவசிய உணவுத் தேவைகளுக்கு ஏற்ற கடைகள் இல்லை.