

இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றில் ஆன்லைன் ஷாப்பிங் நடைமுறை பரவலாக அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங் நடைமுறை வெற்றிகரமாக இயங்குவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது, வீட்டிற்கே பொருட்கள் நேரடியாக டெலிவரி செய்யப்படுவது தான்.
இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஆன்லைன் ஷாப்பிங்கையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். வெளியில் சென்று ஷாப்பிங் செய்வதை காட்டிலும், வீட்டில் இருந்தே சொகுசாக ஷாப்பிங் செய்யும் நடைமுறைக்கு இன்றைய தலைமுறையினர் அடிமையாகி விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
ஆன்லைன் ஷாப்பிங் சில நன்மைகளைக் கொடுத்தாலும், பணப்பபரிவர்த்தனை விஷயங்களில் நாம் சற்று கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் சமீபத்தில் வெளியான ஆன்லைன் ஷாப்பிங் தொடர்பான அறிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆன்லைனில் நாம் ஒரு பொருளை வாங்கும் போது, அதில் நமக்கே தெரியாமல் மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 முதல் ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக இந்திய மக்கள் கிட்டத்தட்ட ரூ.25,000 கோடி முதல் ரூ.28,000 கோடி வரையிலான பணத்தை இழந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
‘டேட்டம் இன்டெலிஜென்ஸ்’ என்ற நிறுவனம் பொருளாதார சந்தை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அறிக்கையை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் தற்போது ஆன்லைன் ஷாப்பிங் தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கியது. இதன்படி சமீபத்தில் ‘Dark Patterns in India’s Online Market Places’ என்ற அறிக்கையை இந்நிறுவனம் வெளியிட்டது.
இந்த அறிக்கையின் படி, இந்தியாவில் சுமார் 304 மில்லியன் ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 88% பேர் Dark Pattern எனும் மறைமுக கட்டணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 63% பேர் ஆன்லைனில் வாங்கும் அனைத்துப் பொருட்களையும் தேர்வு செய்து ஆர்டர் செய்வதற்கு முன்பு, கூடுதல் கட்டணங்களை செலுத்துகின்றனர்.
கூடுதல் கட்டணங்களை செலுத்தும் இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த 2024 ஆம் ஆண்டில் 52% ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த விகிதம் 63% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், 81% பேர் தாங்கள் கூடுதல் கட்டணம் செலுத்துகிறோம் என்று தெரிந்தே ஆன்லைன் ஷாப்பிங்கை மேற்கொள்கிறார்கள்.
வெளிப்படை தன்மையுள்ள சர்வீஸ் மற்றும் நியாயமான விலை உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி, ஆன்லைனில் பொருட்களை அவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கவும் தயார் என்கின்றனர்.
இந்தியாவில் செயல்படும் சுமார் 12 ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை டேட்டம் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் ஆய்வு செய்தது. இந்தியாவில் மட்டும் சுமார் 50 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அமேசான் நிறுவனம் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையான நிறுவனமாக இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஆன்லைன் தளங்களில் ‘Make My Trip’ நிறுவனம் பாதுகாப்பானது எனக் கூறப்படுகிறது.
மறைமுக கட்டணத்தில் இருந்து தப்பிப்பது எப்படி.?
ஆன்லைன் ஷாப்பிங்கின் போது எக்ஸ்பிரஸ் டெலிவரி என்ற ஆப்ஷன் திரையில் தெரியும். அதாவது ஆர்டர் செய்த அடுத்த நாளே பொருள் வீட்டிற்கு வந்துவிடும். இந்த டெலிவரிக்கு கூடுதலாக 50 முதல் 70 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பொதுமக்கள் எக்ஸ்பிரஸ் டெலிவரி கொடுக்காமல், நார்மல் டெலிவரி கொடுத்தால் இந்தக் கட்டணத்தை தவிர்க்க முடியும்.
அதேபோல் ஒரு பொருளை வாங்கும் போது, கூடுதலாக அதனுடன் சேர்த்து மற்றொரு பொருளை வாங்குவதற்கு அந்த ஷாப்பிங் நிறுவனம் பரிந்துரை செய்யும். அந்தப் பொருளை நாம் வாங்காமல் தவித்தால், நமது ஷாப்பிங் செலவு குறையும்.