திருப்பதி பிரம்மோற்சவம்..! கருட சேவை எப்போது..! வெளியானது முக்கிய அப்டேட்..!
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பிரம்மோற்சவத்தைக் காண நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடுவர். குறிப்பாக பிரம்மோற்சவத்தின் சிறப்பு நிகழ்வாக கருதப்படும் கருட சேவையின் போது பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் நடப்பாண்டு பிரம்மோற்சவம் வருகின்ற செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரை, 9 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான அனில்குமார் சிங் தலைமையில் பிரம்மோற்சவம் தொடர்பான சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டன. இதன்படி, திருப்பதி முழுக்க விழாக்கோலமாக காட்சியளிக்கும் வகையில் ரூ.3.5 கோடி செலவில் சுமார் 60 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது.
சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பிரம்மோற்சவம் முடியும் வரை விஐபி தரிசனத்தை ரத்து செய்துள்ளது திருப்பதி தேவஸ்தானம். மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சிறப்பு தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ நாட்களில் தினமும் 8 இலட்சம் லட்டுகள் பிரசாதமாக விநியோகிக்கப்பட உள்ளது. மேலும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 20 உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பதி பிரம்மோற்சவத்தையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை ஆகம விதிகளின்படி கோயில் முழுக்க சுத்தம் செய்யப்பட்டது. அதோடு வாகனங்களின் மராமத்துப் பணிகளும் முடிந்துள்ளன. வாகனங்களைக் கண்காணிக்க 36 LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வருகின்ற செப்டம்பர் 24 இல் கொடியேற்றம் நடக்கவிருப்பதால், அன்றைய தினத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக அளிக்கவுள்ளார். மலர்களால் கோயிலை அலங்கரிக்க ரூ.3.5 கோடியும், மின்சாரப் பணிகளுக்கு ரூ.5.5 கோடியும், கட்டுமானப் பணிகளுக்கு ரூ.9.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவத்தை கண்டுகளிக்க விரும்பும் பக்தர்களுக்கு பிஏசி-5 தொகுப்பு விடுதிகள் செப்டம்பர் 25 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதுதவிர நேரடியாக திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு 3,500 தங்கும் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை அன்னதானம் வழங்கப்படும். பக்தர்களின் வசதிக்காக தினந்தோறும் திருப்பதி - திருமலை இடையே 1,900 முறை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கருட சேவையன்று மட்டும் இந்த எண்ணிக்கை 3,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கருட சேவையைக் காண வரும் பக்தர்களுக்கு 14 வகையான உணவுகள் வழங்கப்பட உள்ளன.
10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அதோடு பக்தர்களின் நலனுக்காக 3,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். குப்பைகளை அப்புறப்படுத்த 3,000-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.