ஜாக்கிரதை! இந்த வெப்சைட் போனா பணம் காலி... திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!

ஏழுமலையான் தரிசன டிக்கெட் பெயரில் நடக்கும் ஆன்லைன் மோசடியை உடனே தெரிந்து கொள்ளுங்கள்.
போலி இணையதளம்
Titupati
Updated on

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் அதிக நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டியுள்ளது.

பக்தர்களின் தரிசன நேரத்தைக் குறைக்க ஆன்லைனில் மாதந்தோறும் டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது திருமலை திருப்பதி தேவஸ்தானம். மேலும் விரைவு தரிசனத்தைப் சாத்தியப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம் செயல்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி இணையதளத்தை நம்பி பக்தர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சூப்பர் வசதி.! இனி 2 மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்..! எப்படி தெரியுமா?
போலி இணையதளம்

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், “ttddevasthanam.online என்ற போலியான இணையதளத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஏழுமலையான் பக்தர்களை ஏமாற்றும் நோக்கத்தில் ஸ்ரீவாரி தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளுக்கு இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி திருமலையில் சாமி தரிசனம் மற்றும் தங்குமிடம் தொடர்பாக பக்தர்கள் யாரும் போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம்” என திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலியான இணையதளம் வாயிலாக வருகின்ற ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய 3 மாதங்களுக்கு சாமி தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகள் எளிதாக கிடைக்கும் என உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. இதனைக் கண்டறிந்த திருப்பதி தேவஸ்தானத்தின் பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை, போலி இணையதளத்தை முடக்கும் பணியில் இறங்கியது.

மேலும் திருமலை 2-ம் நகர காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களை ஏமாற்றும் இதுமாதிரியான மோசடியில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது

திருப்பதி தொடர்பான தகவல்களுக்கு: www.tirumala.org

திருப்பதி ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்ய: ttdevasthanams.ap.gov.in

பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய நினைத்தால், சரியான இணையதளங்களில் செய்ய வேண்டும். மேலும் மாதாந்திர டிக்கெட் புக்கிங் குறித்த தகவல்கள் முன்கூட்டியே வெளியாகும். அதற்குப் பிறகே டிக்கெட் புக்கிங் செய்ய முடியும்.

திருப்பதி தரிசனம்
Tirupati DarshanAI Image
இதையும் படியுங்கள்:
116 வயதில் திருப்பதி மலை ஏறிய பாட்டி.! வயது ஒரு தடையல்ல.!
போலி இணையதளம்

திருப்பதியில் தினந்தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும். குறிப்பாக சீசன் மாதமான புரட்டாசி மற்றும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடக்கும் மார்கழி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்னும் புரட்டாசி மாதம் தொடங்க 50-க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், போலி இணையதளம் கண்டறியப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரைவான சாமி தரிசனம் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்ற பலரும் முயற்சித்து வருகிறார்கள். தெரியாத நபர்கள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம்.

சிறப்பு சாமி தரிசனம்: ​

விரைவாக சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக ரூ.300 சிறப்பு டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டை ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யும் போது சாமி தரிசனத்திற்கான குறிப்பிட்ட தேதி மற்றும் நேரம் வழங்கப்படும்.

ஆர்ஜித சேவைகள்:

திருக்​கல்யாண உற்சவம், பெருமாள் ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் போன்ற சேவைகளைக் காண ஆன்லைன் குலுக்கல் முறை மற்றும் பொது முன்பதிவு முறையில் டிக்கெட் பெறலாம்.

இலவச தரிசனம்:

ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு, திருப்பதியில் கவுன்டர்கள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு, இலவச சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com