

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, நாடு முழுவதிலும் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், எப்போதுமே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
பெருமாளுக்கு எத்தனையோ தலங்கள் இருந்தாலும் திருப்பதி தலம் மட்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் திருப்பதி தேவஸ்தானம் மற்றுமொரு ஏழுமலையான் கோயிலை கட்ட முடிவெடுத்திருக்கிறது. இதற்காக பீகார் அரசும் சுமார் 10.11 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ரூ.1 என்ற கட்டணத்தில் குத்தகைக்கு கொடுத்துள்ளது.
பீகார் அரசின் இந்த நடவடிக்கை இந்து கலாச்சார உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது. ஏழுமலையான் கோயில் கட்டுமான நடவடிக்கைகளை செயல்படுத்த, பீகார் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநருடன், திருப்பதி தேவஸ்தான குழு வெகு விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
திருப்பதி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது லட்டு தான். ஏழுமலையானை தரிசித்த கையோடு, பிரசாதமாக பக்தர்கள் லட்டுவை வாங்கிச் செல்வது வழக்கம். ஆண்டுதோறும் திருப்பதியில் பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் தற்போது மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாவும் தொடங்கவிருக்கிறது. வைகுண்ட ஏகாதசியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், தற்போது மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இதன்படி வெகு விரைவில் பீகாரில் திருப்பதி தேவஸ்தானம், ஏழுமலையான் கோயிலை கட்டவுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், “பீகார் மாநிலம் பாட்னாவில் திருப்பதி ஏழுமைலையான் கோயிலை கட்டுவதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ‘மொகமா காஸ்’ என்ற பகுதியில் 10.11 ஏக்கர் நிலத்தை ஓராண்டுக்கு 1 ரூபாய் என்ற கட்டண விகிதத்தில், 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது பீகார் அரசு. இது திருப்பதி தேவஸ்தானம் மட்டுமின்றி, பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.
நிலம் வழங்கிய பீகார் அரசுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுதவிர புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பரிந்துரை செய்த பீகார் சுற்றுலாத் துறை மேம்பாட்டு கழக இயக்குநருக்கும் நன்றி. வெகு விரைவில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பீகாரில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். அதிகாரிகளின் ஆய்வு முடிவுகளுக்குப் பிறகு வெகு விரைவில் திருப்பதி கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலை கட்ட பீகார் அரசு ஒப்புதல் அளித்து, நிலம் வழங்கியதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு மற்றும் மாநில அமைச்சர் லோகேஷ் நன்றி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, கன்னியாகுமரி, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, ஒடிசா, மும்பை, புவனேஷ்வர் மற்றும் ஜம்மு உள்ளிட்ட இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கிளை கோயில்கள் உள்ள நிலையில், தற்போது பிகார் தலைநகரான பாட்னாவிலும் ஏழுமலையான் கோயில் கட்டப்பட உள்ளது.
திருப்பதி கோயிலுக்கு ஏற்கனவே வருமானம் அதிகரித்து வரும் நிலையில், பாட்னாவில் ஏழுமலையான் கோயிலை கட்டவிருப்பது வருமானத்தைப் பெருக்கும். அதோடு வடமாநில பக்தர்கள் தென்னிந்தியாவில் உள்ள திருப்பதிக்கு வரவேண்டிய அவசியம் இருக்காது. அவர்கள் பீகாரிலேயே திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியும்.