

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு (திருப்பதி கோவில்) நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்று வரை எள்ளளவும் குறைந்தபாடில்லை.
ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இன்று (அக்டோபர் 1) மற்றும் அக்டோபர் 5 ஆகிய 2 நாட்களுக்கு மட்டும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த பிரம்மோற்சவ விழா தொடக்கம் முதலே திருப்பதி மலையில் பக்தர்களில் கூட்டம் குறையாமல் உள்ளது. தினமும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மீதமுள்ள பக்தர்கள் மறுநாள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். புரட்டாசி மாதம் மற்றும் வரவிருக்கும் தொடர் விடுமுறை நாட்களால் கூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
எனவே சாதாரண பக்தர்களும் சிரமம் இன்றி விரைந்து தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் இன்று (அக்டோபர் 1) மற்றும் 5-ம்தேதி விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது.
5 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை; மாறாக குறிப்பிட்ட அக்டோபர் 1 (வியாழன்) மற்றும் அக்டோபர் 5 (திங்கள்) ஆகிய தேதிகளில் மட்டுமே புரோட்டோகால் விஐபி (Protocol VIPs) தவிர்த்து மற்ற விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இன்று முதல் 4-ம்தேதி வரை பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாத விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், பொது தரிசன பக்தர்களுக்கு விரைவாக சாமி தரிசனம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை பக்தர்கள் கவனத்தில் கொண்டு, முழு ஒத்துழைப்பு தருமாறு திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
தற்போது விடுமுறை மற்றும் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் என்பதால் நேரடி இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே திருப்பதி ஏழுமலையான தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரசாத லட்டுக்களை பக்தர் பிளாஸ்டிக் பைகளில் எடுத்து சென்று சாப்பிட்டு விட்டு அந்த பிளாஸ்டிக் பைகளை மலையில் வீசுவதால் சுற்றுச்சுழல் மாசு ஏற்படுகிறது.
எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் வாங்கும் லட்டு அளவுக்கு ஏற்றாற் போல் ரூ.10, 20, 50, 80, 100 விலைகளில் சணல் பைகளை விற்பனை செய்து வருகிறது.