

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய தகவலியல் மையம் இணைந்து ‘கார்த்திகை தீபம் 2026’ (Karthigai Deepam Mobile App 2026) செயலி மற்றும் வாட்ஸ்அப் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 15-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது.
சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் அதனை போற்றும் வகையில் கார்த்திகை தீபத்தன்று இந்த மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
பவுர்ணமி மற்றும் மகா தீபத்தன்று பல லட்சம் பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டம் தூரம் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டு மகா தீபத்தன்று 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முதலே பல்வேறு மாவட்டங்கள் இருந்தும், பிற மாநிலங்களிலும் இருந்தும் அதிகளவு பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து வருகிறார்கள்.
இதற்கிடையே திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ‘கார்த்திகை தீபம் 2026’ (Karthigai Deepam Mobile App 2026) செயலியை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை 6:00 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ள நிலையில், பக்தர்களுக்குத் தேவையான முக்கியத் தகவல்களை இந்தச் செயலி வழங்குகிறது.
‘கார்த்திகை தீபம் 2026’ எனும் செயலி மூலம் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை அறிந்து கொள்ள முடியும். கார்த்திகை தீபம் 2026 செயலி வாட்ஸ் அப் உடன் இணைக்கப்பட்டுள்ளது, அதற்கு Hi என மெசேஜ் அனுப்பும்போது பக்தர்களுக்கான அடிப்படை தகவல்களை Location உடன் தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயலியை புதுப்பித்துள்ளது.
ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும், இந்து சமய அறநிலையத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக பக்தர்களின் வசதிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கார்த்திகை தீபத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபம் 2026 எனும் செயலியை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலியின் மூலம் திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களின் இருப்பிடங்கள், கார் நிறுத்தும் இடங்களின் இருப்பிடங்கள், மருத்துவ முகாம்களின் இருப்பிடங்கள், 108 ஆம்புலன்ஸ் சேவைகளின் இருப்பிடங்கள், இரு சக்கர ஆம்புலன்ஸ் இருப்பிடங்கள், தற்காலிக கழிப்பறைகளின் இருப்பிடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தீயணைப்பு சேவை, காவல்துறையின் உதவி, அன்னதான இடங்கள் ஆகிய இடங்களை பற்றி விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் இந்த செயலில் திருவண்ணாமலை கோவில் வரைப்படத்தை பார்வையிடுதல் அருகே உள்ள வசதிகள் AI மூலம் காவல்துறை என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண், காணாமல் போன குழந்தைகளைக் கண்டறியும் உதவி எண்கள், பிற மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் வாகனங்களின் பாதை வழிகள், காவல்துறை உதவி மற்றும் SOS அவசர சேவை உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடுகள் இந்த செயலில் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த செயலியில் இருந்து Hi என மெசேஜ் அனுப்புவதன் மூலம் நமக்கான தகவல்களை பெற முடியும்.
தீபத்திருவிழாவிற்கு வருகை தரும் 40–50 லட்சம் பக்தர்களின் பயணத்தை எளிதாக்கவும், தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் இந்த செயலி உதவுகிறது.