திருவண்ணாமலையில் பரபரப்பு : Ray-Ban Meta AI கண்ணாடியை பயன்படுத்தி சாமி படம் எடுக்க முயற்சி..!

கருவறை தெய்வங்களை ரகசியமாகப் படம் பிடிக்க முயற்சி; அமித் ஷா வருகைப் பாதுகாப்பிற்கு இடையே நடந்த பரபரப்பு சம்பவம்!
திருவண்ணாமலை ஸ்மார்ட் கண்ணாடி சர்ச்சை
திருவண்ணாமலை ஸ்மார்ட் கண்ணாடி சர்ச்சைimage source:polimer
Updated on

தென்னகத்தின் சிவன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில். இங்கு தரிசனம் செய்ய நாள் தோறும் திரளான பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பது வழக்கம். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திராவிலிருந்தும் அதிக பக்தர்கள் இங்கு வருவதுண்டு.

சமீபத்தில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள புகழ்பெற்ற இடுக்குப்பிள்ளையார் கோவிலின் குறுகலான பகுதியில்,ஆந்திராவில் இருந்து வந்த பக்தர் ஒருவர் சிக்கி உயிரிழந்த அதிர்ச்சி விலகுவதற்குள் ஹைதராபாத்தை சேர்ந்த இந்த இளைஞர்களகன் விதிமுறைகள் மீறிய இந்த செயல் தற்போது பேசப்படும் செய்தியாக உள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பவுனிஷ் மற்றும் மகேஷ் ஆகியோர் கேமரா பொருந்திய மெட்டா ஏஐ ரே பேன் கண் கண்ணாடியை பயன்படுத்தி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர் என்றும் கண்ணாடியில் இருந்து திடீரென வெளிச்சம் தோன்றியதால் காவல்துறை அவர்களை விசாரித்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த ஹைதராபாத்தை சேர்ந்த பவுனிஷ் மற்றும் மகேஷ் ஆகியோர் ஸ்வாமி தரிசனத்தின்போது, கேமரா மற்றும் ஏஐ வசதி கொண்ட ரே பேன் (Ray-Ban Meta) ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தி யாரும் அறியாத வண்ணம் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். அந்த நேரம் கண்ணாடியில் திடீரென வெளிச்சம் ஒளிரவே ஊழியர்கள் அதைக் கண்டு அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் விதிமுறைகளை மீறி கருவறை தெய்வங்களை புகைப்படம் எடுக்க முயற்சித்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் காவல்துறை கண்காணிப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கோயில் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக அந்த நபர்களைப் பிடித்தனர்.அவர்கள் அணிந்திருந்த அதிநவீன ஸ்மார்ட் கண்ணாடி பறிமுதல் செய்யப்பட்டது.கண்ணாடியின் மூலம் ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இவர்கள் பயன்படுத்திய கேமரா பொருத்தப்பட்ட Ray-Ban Meta AI கண்ணாடி என்பது சாதாரண கண்ணாடி போல அணிந்துகொண்டு, கேமரா, மைக்ரோஃபோன், ஸ்பீக்கர், Meta AI ஆகியவற்றை பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் கண்ணாடி.ஆகும். இது சாதாரண கண்ணாடி போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Meta AI Smart glasses
Meta AI Smart glasses

இதை அணிந்து கையில் போனை எடுக்காமல், குரல் கட்டளை மூலம் புகைப்படம்/வீடியோ ஆகியவற்றை எடுக்கலாம். AI உதவியுடன்“நான் என்ன பார்க்கிறேன்?”, “இதில் என்ன இருக்கிறது?” போன்ற கேள்விகளை கேட்கலாம். கண்ணாடி கேமரா மூலம் பார்த்த காட்சியை AI ஆய்வு செய்து குரலில் பதில் அளிக்கும்.

குறிப்பாக எழுத்துகளைப் பார்த்து மொழிபெயர்க்கும் வசதிகள் உள்ளன; ஆனால் சில AI அம்சங்கள் நாடு/பகுதி அடிப்படையில் மாறுபடும் என்கின்றனர். காதில் தனியாக earbud அணியாமல் கண்ணாடியின் மூலம் ஸ்பீக்கர் இசை பாடல்களை கேட்கலாம். சில தளங்களில் கண்ணாடி கேமரா மூலம் நேரலை செய்ய முடியும். குறிப்பாக பயணம்/வெளிப்புற பயன்பாடுக்கு ஏற்றதாக நாம் பார்க்கும் இடங்கள், பொருட்கள், எழுத்துகள் குறித்து AI உதவி பெறலாம் என்பது சிறப்பு.

இருப்பினும் இதை அனைவரும் நினைத்த போது நினைத்த இடங்களில் பயன்படுத்த முடியாது. முக்கியமாக தனியுரிமை (Privacy) தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளன. மற்றவர்களை அவர்களின் அனுமதியின்றி பதிவு செய்வது பிரச்சினையாகலாம். குறிப்பாக வீடு, அலுவலகம், மருத்துவமனை, வங்கி போன்ற தனியுரிமை முக்கியமான இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தக் கண்ணாடியை இந்தியாவில் முழுமையாக தடை செய்திருக்கவில்லை. இது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோயிலுக்கு வருகை தரவிருந்த நிலையில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு கூடுதலானதாக அறியப்படுகிறது.

நடிகர்கள் நடிகைகள் முக்கியஸ்தர்கள் அரசியல் தலைவர்கள் போன்ற விஐபிகள் தரிசனத்தின் மூலம் கோவில்களில் வழிபடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை சமீபத்தில் விதித்துள்ளது தமிழ்நாடு அறநிலையத்துறை.

கோவில் வளாகத்தில் விஐபிகள் பிரபலங்கள் போட்டோ வீடியோ எடுப்பதற்கு அனுமதி இல்லை , கோவில்களில் தெய்வ சிலைகள் கருவறைகளை போட்டோ வீடியோ எடுக்கவும் ரீல்ஸ் போடுவதற்கு தடை, முக்கியமான கோவில்களில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் செல்போன்கள் பயன்படுத்த முழுவதுமாக தடை போன்ற பலவித முன்னேற்பாடுகள் அரசு சார்பில் புதிய கட்டுப்பாடுகளாக விதித்த நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

இதையும் படியுங்கள்:
அறுபடை வீடு செல்ல இலவச ஆன்மீகப் பயணம்! அரசு தரும் அரிய வாய்ப்பை பெறுவது எப்படி?
திருவண்ணாமலை ஸ்மார்ட் கண்ணாடி சர்ச்சை
logo
Kalki Online
kalkionline.com