#JUST IN : திமுக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு! பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதாக உதயநிதி குற்றச்சாட்டு!

கண்ணதாசனின் கவிதையைச் சுட்டிக்காட்டி திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிய முதலமைச்சர்!
தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவைSourcee:twitter
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவை, முதலமைச்சரின் அனல் பறக்கும் பேச்சினாலும் எதிர்க்கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளினாலும் களைகட்டியது.மேலும் இன்றைய கூட்டத்தில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கும் குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்க இருப்பதால், சட்டசபையில் இன்றும் அனல் பறக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்த்த நிலையில் அது நிரூபணம் ஆகியுள்ளது. ,

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் திமுக வலியுறுத்தி வந்த நிலையில் முதல்வர் விஜய் ஆதாரங்களைக் காட்டி திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை பற்றி குற்றச்சாட்டுகளை ஆவேசமாக முன் வைத்துப் பேசினார்.

"பேசிப் பழகிய கை, வாங்கிப் பழகிய கை, போட்டு பழகிய பை..." எனக் கவிஞர் கண்ணதாசன் திமுக குறித்து பேசியதை சுட்டிக்காட்டி இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், திமுகவினர் கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முன் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைச் சரமாரியாக வைத்தார்.

திமுக தலைவர் ஒருவர், தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கு 'நல்ல சாவு வராது' என்கிறார். என் மேஜையில் உள்ள மூன்று கோப்புகளை (Files) திறப்பதற்கு முன், இன்று ஒரு சாம்பிள் (Sample)" எனச் சர்க்காரியா கமிஷன் பற்றிய சில தகவல்களை, குறிப்பாகத் திமுகவினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சட்டசபையில் முன்வைத்தார் முதலமைச்சர் விஜய். "அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"மக்கள் தீர்ப்பை ஏற்காத நீங்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்?" என முதலமைச்சர் விஜய் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோது, திமுகவினர் தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். இதனால் முதலமைச்சரின் உரை மீதான விவாதத்தில் திமுகவினர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், பேச அனுமதி தராத சபாநாயகரைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டபடி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு தலைமையில் சபாநாயகரின் இருக்கை முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் பேசுகையில், "திமுகவினரின் உருட்டல்-மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். முதலமைச்சர் பேசுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே திமுகவினர் வந்துள்ளனர். திமுக எம்.எல்.ஏ.க்கள் தாங்களாகவே வெளியேற வேண்டும்; இல்லையெனில் அவைக்காவலர்கள் மூலம் திமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற நேரிடும்" எனக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து அவைக்காவலர்கள் உள்ளே வந்தனர்.

இதைத் தொடர்ந்து, "திமுக எம்.எல்.ஏ.க்களுக்குப் பேச அனுமதி வழங்கலாம்" என முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்தார். அந்த வேண்டுகோளின் பேரில் சபாநாயகர், திமுகவினரை அவரவர் இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொண்டு, "உங்களைப் பேச அனுமதிக்கிறேன்" என்று கூறினார்.

மேலும் சபாநாயகர் தெரிவிக்கையில், "முதலமைச்சர் பேசி முடித்ததும் திமுகவினர் பேச அனுமதி அளிக்கலாம் என்றே இருந்தேன். ஆனால் முதலமைச்சரின் பேச்சு மக்களிடம் சென்று சேரக் கூடாது என்பதற்காகவே திமுகவினர் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். முதலமைச்சர் பேசும்போது ஒரு விநாடி கூட திமுகவினர் அமைதியாக இல்லை. நான் பேசிய பிறகு பதிலளிக்க அனுமதிக்கிறேன். திமுகவினர் என்னை நிர்ப்பந்தம் செய்தால் பேச அனுமதி இல்லை; திமுகவினர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எதிர்க்கட்சித் தலைவரின் செயல் என்னை நிர்ப்பந்திப்பது போல் உள்ளது" எனக் கூறி, மீண்டும் திமுகவினரின் செயலைக் கண்டித்துப் பேசினார். இதையடுத்துச் சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். சுமார் 25 நிமிடங்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளியேறினர்.

முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் திமுகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அனுமதி தர மறுத்த சபாநாயகரைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

திமுகவுக்கு ஆதரவாக ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி வெளிநடப்பு:

சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரைக்குப் பேச வாய்ப்பு அளிக்காததைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாகக் கூட்டணிக் கட்சியினரான மனிதநேய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

"அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் முதலமைச்சரின் பதிலுரை அமைந்துள்ளது" என ஜவாஹிருல்லா மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "முதலமைச்சர் பேசி முடித்ததும் நாங்கள் பேச வாய்ப்பு கேட்டோம். முதலில் தருவதாகச் சொன்னார். பிறகு என்ன அழுத்தம் வந்ததோ... முதலமைச்சரின் முடிவா, இல்லை அமைச்சர்கள் யாரேனும் சொன்னார்களா என்று தெரியவில்லை. திடீரென்று சபாநாயகர் நாங்கள் பேசுவதற்கு அனுமதி மறுத்துவிட்டார். என் பதிலுக்கு அஞ்சியே சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டது" எனப் பேட்டியளித்தார்.

இதையும் படியுங்கள்:
சொந்தங்களிடம் ரத்தம் வாங்குவது ஆபத்தா? உயிருக்கே உலையாக்கும் TA-GVHD உண்மை!
தமிழ்நாடு சட்டப்பேரவை
logo
Kalki Online
kalkionline.com