சொந்தங்களிடம் ரத்தம் வாங்குவது ஆபத்தா? உயிருக்கே உலையாக்கும் TA-GVHD உண்மை!

நெருங்கிய உறவினர்களிடம் ரத்தம் பெறுவதில் உள்ள ஆபத்துகள், TA-GVHD பாதிப்பு மற்றும் ரத்தக் கதிரியக்கச் சிகிச்சையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் சரும மருத்துவர் தி.ரா. ரவீந்திரன் M.D.
ரத்த தானம்
ரத்த தானம்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ஒருவருக்குத் திடீரென்று விபத்து நேரும்போதோ அல்லது அறுவை சிகிச்சை செய்யும்போது ரத்தம் தேவைப்பட்டாலோ, குடும்பத்தினர் அல்லது உடன் பிறந்தவர்கள் ரத்த தானம் செய்ய முன்வருவது இயல்பான ஒன்று. ஆனால், மருத்துவ அறிவியலின் படி நெருங்கிய ரத்த சொந்தங்களிடமிருந்து நேரடியாக ரத்தம் பெறுவதில் சில ஆபத்தான மருத்துவச் சிக்கல்கள் ஒளிந்துள்ளன.

சமீபத்தில் தமிழகத்தில், தேனியில் ஒரு பெண்ணிற்கு நெருங்கிய உறவினரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம், கதிரியக்கச் சிகிச்சைக்கு உட்படுத்தப்படாமல் செலுத்தப்பட்டதால், அவருக்கு தீவிர பக்கவிளைவு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து எழுந்த மருத்துவ ஆய்வுகளும் இந்தப் பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. உறவினர்களிடம் ரத்தம் பெறும்போது அதன் பின்னுள்ள அறிவியல் பின்னணியையும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

அறிவியல் பின்னணி: என்ன நடக்கிறது?

பொதுவாக, முற்றிலும் அறிமுகமில்லாத ஒருவரிடமிருந்து ரத்தம் பெறும்போது, நோயாளியின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் அந்த ரத்தத்திலுள்ள அந்நிய வெள்ளை ரத்த அணுக்களை உடனடியாக அடையாளம் கண்டு அழித்துவிடும். ஆனால், தாய், தந்தை, சகோதரன், சகோதரி அல்லது குழந்தைகளிடமிருந்து நேரடியாக ரத்தம் பெறும்போது ஒரு பேராபத்து உண்டாகிறது.

ரத்த தானம்
ரத்த தானம்

உறவினரின் ரத்தத்திலுள்ள மரபணு குறியீடுகளும் நோயாளியின் மரபணு குறியீடுகளும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்புள்ளது. இதனால், நோயாளியின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் அந்த வெள்ளை ரத்த அணுக்களை 'அந்நியமானது' என்று அடையாளம் காணத் தவறிவிடும். இதன் காரணமாக, உறவினரின் ரத்தத்திலுள்ள 'டி-செல்கள்' (T-cells) அழியாமல் நோயாளியின் உடலுக்குள் தொடர்ந்து வாழத் தொடங்கிவிடும்.

இந்த புதிய டி-செல்கள், நோயாளியின் உடலிலுள்ள எலும்பு மஜ்ஜை, கல்லீரல், தோல் மற்றும் செரிமானப் பாதையை 'அந்நிய உறுப்புகள்' எனத் தவறாக நினைத்துத் தாக்கத் தொடங்கும். இந்த நிலைக்குத்தான் TA-GVHD (Transfusion Associated - Graft versus Host Disease) என்று பெயர். இது ரத்த மாற்று சிகிச்சையில் ஏற்படும் மிகத் தீவிரமான பக்கவிளைவாகும். இதில் இறப்பு விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயாளியா நீங்கள்? சிகரெட் பிடித்தால் காத்திருக்கும் ஆபத்து!
ரத்த தானம்

இதை எவ்வாறு தடுக்கலாம்?

இந்த பாதிப்பைத் தடுக்க 'ரத்தக் கதிரியக்கச் சிகிச்சை' என்ற எளிய முறை மருத்துவ உலகில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரத்தத்தை நோயாளிக்குச் செலுத்துவதற்கு முன்பாக, எக்ஸ்-ரே அல்லது காமா கதிர்கள் மூலம் குறிப்பிட்ட அளவிலான கதிரியக்கத்திற்கு உட்படுத்துவார்கள். இது ரத்தத்திலுள்ள உறவினரின் டி-செல்களின் DNA-வைச் செயலிழக்கச் செய்து, அவை உடலுக்குள் பெருக்கமடைவதைத் தடுக்கும்.

இந்தச் சிகிச்சையால் ரத்தம் கதிரியக்கத் தன்மை பெறாது. அதில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களும் பிளேட்லெட்டுகளும் முழுப் பாதுகாப்போடு இயங்கும். தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ வழிகாட்டுதலின்படி, நெருங்கிய ரத்த சொந்தங்களிடமிருந்து பெறப்படும் ரத்த அணுக்களைக் கதிரியக்கச் சிகிச்சைக்கு உட்படுத்திய பிறகே நோயாளிக்குச் செலுத்த வேண்டும் என்பது கட்டாய விதியாகும். எனவே ரத்த வங்கிகள் உறவினரின் ரத்தத்தைப் பெறும்போது அதை முறையாகப் பதிவேற்றம் செய்து, கதிரியக்கச் சிகிச்சை செய்த பின்னரே வழங்க வேண்டும்.

மருத்துவக்குழு, நோயாளிக்கு ரத்தம் செலுத்துவதற்கு முன்பு, தேவையான பாதுகாப்புப் பரிசோதனைகள் மற்றும் கதிரியக்கச் சிகிச்சை சான்றிதழ்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து, பதிவேடுகளைத் துல்லியமாகப் பராமரிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு காய்ச்சல் வலிப்பு வந்தால் செய்யக்கூடாத ஆபத்தான தவறுகள்!
ரத்த தானம்

பொதுமக்கள் செய்யவேண்டியது:

ரத்த வங்கிகளில் ரத்ததானம் செய்யும் அந்நிய நபர்களின் ரத்தமே பொதுவான சூழலில் மிகவும் பாதுகாப்பானது. தவிர்க்க முடியாத சூழலில் சொந்தங்களின் ரத்தத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், அது கதிரியக்கச் சிகிச்சை செய்யப்பட்ட ரத்தம்தானா என்பதை ரத்த வங்கியிடம் கேட்டு உறுதிசெய்ய வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com