

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தது முதல் சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளில் இருந்தே சட்டசபை நிகழ்வுகள் இடைவெளியின்றி நேரலையில் ஒளிபரப்பாகி வருகின்றன. தமிழ்நாடு அரசு செய்தித்துறை சார்பிலான யூடியூப் பக்கத்திலும் இந்த நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
பொதுவாக கடந்த காலங்களில் தமிழக சட்டசபை நிகழ்வுகள் காலையில் தொடங்கி அதிகபட்சமாக 3 அல்லது 4 மணி வரை நீடிப்பது உண்டு. இதையே நீண்ட நேரம் நடைபெற்றதாக எம்எல்ஏக்கள் கூறுவதுண்டு. ஆனால் தவெக ஆட்சியில் சட்டசபை 10 மணி நேரம் நீடித்தது சாதனை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26-ம்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கிய அவை இரவு 7.13 மணி வரை நீடித்தது. இதுதான் தமிழக சட்டசபை வரலாற்றில் இடைவெளி விடாமல் தொடர்ந்து அவை அதிகபட்சமாக நடைபெற்ற நேரமாக கருதப்படுகிறது.
சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் தங்கள் தொகுதி எம்எல்ஏக்களின் செயல்பாடுகள், மக்கள் பிரச்சினைகள் அவையில் முன்வைக்கப்படும் விதம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் நேரடியாக கவனிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சட்டசபை நேரலைக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தவெக அரசு சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பத் தொடங்கியதிலிருந்து, மாநில சட்டமன்றத்திற்கு முன்பு காணப்படாத எண்ணிக்கையில் பொது மக்கள் அரசியலைக் கண்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர், தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல்களின் யூடியூப் சேனல்களில் 20,000க்கும் குறைவான பார்வைகளையே பெற்று வந்த நிலையில், தற்போது முக்கிய யூடியூப் நேரலைகளில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
முன்பு டிவி சீரியலில் மூழ்கி இருந்த வயதானவர்கள் முதல் பெண்கள் வரை தற்போது சட்டமன்ற நேரலையை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதுவும் விவாதங்களில் போது சட்டசபையில் எல்எல்ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை எப்படி பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நேரடியாக பார்க்க முடிகிறது.
சட்டமன்ற நேரலை விவாதங்களில் நடக்கும் சிறிய அசைவுகள் கூட, சமூக வலைத்தளங்களில் எவ்வளவு விரைவாக வைரலாகின்றன என்பதை இது விளக்குகிறது.
குறிப்பாக ‘விஜய் vs உதயநிதி’ வீடியோக்கள் வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன;
ஆனால், மறுபுறம் சட்டசபை விவாதங்களின்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அவ்வப்போது கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் அறிவித்தாலும், அவ்வாறு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் பேச்சுகள் அல்லது காட்சிகள், நேரலை ஒளிபரப்பு மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை விட்டு வெளியேறுவதற்கு முன்பே அவர்களது தவறுகள் ஏற்கனவே பொதுமக்களை சென்றடைவதால், பின்னர் அவை மீம்களாக மாறிவிடுவதுடன், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களாக அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
இப்போது பேரவை கூட்டத்திற்கு என தனி பார்வையாளர் கூட்டம் உருவாகியுள்ளது, மேலும் அவை அதைப்பற்றி அதிகளவில் விழிப்புடன் இருப்பது போலத் தெரிகிறது.
சட்டமன்ற உரை ஒரு காலத்தில் நிருபர்களின் குறிப்பேடுகள், மாலை நேரச் செய்திகள் மற்றும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் துணுக்குகள் வழியாக மெதுவாக வெளியே பரவியது. இப்போது, ஒரு பதிலுக்கு முன் ஏற்படும் தயக்கம், குறுக்கீடு, சிரிப்பு, உறுப்பினர் எழுந்து நிற்பது மற்றும் அமைச்சர் அவரை உட்காரச் சொல்வது ஆகியவற்றை மக்கள் பார்க்க முடிகிறது. அது அரசியல்வாதிகளையும் மாற்றுகிறது.
ஒரு கொள்கைக் குறிப்பின் அடுத்த 20 பக்கங்களை விட, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படும் 30 வினாடிகள் அரசியல் ரீதியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என்ற உண்மையை அனுபவம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இப்போது கற்றுக்கொள்கிறார்கள்.
சபாநாயகர் பின்னர் உத்தியோகப்பூர்வ பதிவேட்டிலிருந்து பொருத்தமற்ற கருத்துக்களை நீக்கினாலும், "சட்டமன்ற நேரலையிலிருந்து காட்சிகள் எவ்வளவு விரைவாக வெட்டப்பட்டு வைரலாகின்றன" என்பதை திமுக மூத்த தலைவர் கே.என். நேரு சுட்டிக்காட்டினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக திமுக கொறடா எ.வ. வேலு உள்ளிட்ட எதிர்க்கட்சி தரப்பினர் சபாநாயகரிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பேச்சுகள் மற்றும் காட்சிகளை ரீல்ஸ் அல்லது வீடியோவாக வெளியிடக்கூடாது என்றும் அப்படி நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
எனினும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருவதாக கூறப்படும் நிலையில், தற்போதைய நேரலை முறையில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அதிகளவிலான பொதுமக்கள் நேரடியாக சட்டசபை விவாதங்களை பார்த்து வரும் நிலையில், நேரலை ஒளிபரப்பில் மாற்றம் கொண்டு வருவது வெளிப்படைத்தன்மையை பாதிக்கக்கூடும் என்று பலரும் கருத்து தெரிந்துள்ளனர்..
மேலும் சட்டசபை நடவடிக்கைகளை எந்தவிதமான தாமதமும் இல்லாமல் தொடர்ந்து நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்ற கருத்தும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.
குறிப்பாக, தங்களது தொகுதி எம்எல்ஏக்கள் என்ன பேசுகிறார்கள், மக்கள் பிரச்சினைகள் அவையில் எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதை பொதுமக்கள் நேரடியாக கவனிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நேரலையில் மாற்றம் கொண்டு வருவது மக்களின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்பதால் எந்த தடையும் இல்லாமல் நேரலை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.