

தமிழக சட்டசபையில் துறை ரீதியான விவாதம் இன்று 3வது நாளாகத் தொடங்கியது. இன்று முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் தமிழக மக்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி பால் கூட்டுறவு விற்பனையாளர்களின் உழைப்பைக் கருத்தில் கொண்டு பால் கெள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தி உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.
அதோடு அரசு ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இதன்படி, ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.38 இல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவமனைகளில் இதுவரை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை மட்டுமே சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தக் காப்பீட்டு தொகை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள்:
* தமிழக மக்களுக்கு முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
* பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
* திருநங்கைகளுக்கான சிகிச்சை திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வழங்கப்படும்.
* முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவித்தார் முதல்வர் விஜய். எம்எல்ஏக்களுக்கு மாதந்தோறும் வாகனப்படியாக ரூ.75,000 வழங்கப்படும். கூடுதலாக அனைத்து எம்எல்ஏக்களுக்கு உதவியாளர் நியமிப்பதோடு, அவர்களுக்கு ரூ.25,000 உதவிப்படி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
* அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கையை உருவாக்க ரூ.341 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்க செவிலியர், மருத்துவவியல் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்க கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும். அதோடு 7 புதிய அரசு செவிலியர் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
* முதல்வரின் புற்றுநோய் பராமரிப்புத் திட்டம் மேம்படுத்தப்படும். இதற்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.470 கோடி செலவில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும். இதுதவிர 5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும்.
எம்எல்ஏ-க்கள் நேர்மையாக தங்கள் கடமையைச் செய்ய கார் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட வசதிகளை முதல்வர் வழங்கியதை ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், விசிக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர்.
“கேட்பதற்கு முன்னால் கொடுப்பவன் அரசன்; கேட்டவுடன் கொடுப்பவன் மக்கள் தலைவன்” என்பதற்கு முதல்வர் விஜய் இலக்கணமாகத் திகழ்கிறார் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம் சூட்டினார்.
அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், “தவெக எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கும் வாகனங்களை அளித்துள்ளார் முதல்வர் விஜய். இது பலருக்கும் பயன்படக்கூடிய விஷயம். ஓட்டுநருக்கு வேலை, உதவியாளருக்கு வேலை என மொத்தம் 468 வேலைவாய்ப்புகள் இதன்மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் பம்பரமாய் சுற்றி வேலை செய்வதற்கு அரசின் கார் மற்றும் உதவியாளர் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
முதல்வர் சிறப்பான திட்டங்களை அறிவித்த போதிலும், கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் திட்டத்தின் மீதான விவாதத்தை நாளை ஒத்தி வைத்தார் சபாநாயகர். இதனால் அதிமுக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது.