
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சீனாவின் டிங் லிரெனை 7½ - 6½ என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் பட்டம் வென்றார். இதன் மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்து தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். அதேபோல், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 18 வயதான குகேஷ், செஸ் உலகின் 18-வது சாம்பியனாக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் குறைந்த வயதில் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்த வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார். சாம்பியனாக மகுடம் சூடிய குகேசுக்கு ரூ.11½ கோடி பரிசுத்தொகையாக கிடைத்ததுள்ளது.
வெற்றி பெற்ற பின் பேசிய குகேஷ். "இந்த தருணத்துக்காக கடந்த 10 ஆண்டுகள் காத்திருந்தேன். எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணம் இதுவாகும். என்னை பொறுத்த வரை டிங் லிரென் உண்மையான சாம்பியன், அவருக்காக நான் வருந்துகிறேன்" என்றார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர் குகேசுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்க்கு தமிழக முதல்வர் ரூ.5 கோடி வழங்குவதாக அறித்துள்ளார்.
இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய குகேஷ்க்கு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பள்ளி மாணவ-மாணவிகள் திரண்டு வந்து மலர் தூவி வாழ்த்தினர்.
அதன் பின்னர் கொரட்டூரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற அவருக்கு உறவினர்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மாலை அணிவித்தும், பரிவட்டம் கட்டியும் வாழ்த்து தெரிவித்ததுடன், மேளதாளங்கள் முழங்க நடனம் ஆடி உற்சாகமாக வரவேற்றனர்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேசுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலையை குகேசுக்கு வழங்கி பாராட்டினார்.
பாராட்டு விழாவில் உலக சாம்பியன் குகேசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். அப்போது மேடையின் கீழ் அமர்ந்திருந்த குகேசின் பெற்றோரை மேடைக்கு அழைத்து ரூ.5 கோடி பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கிய முதல்வர், குகேசின் பெற்றோரையும் பாராட்டினார்.
மேலும் விழாவில் முதல்வர் பேசுகையில், உலகின் இளைய செஸ் சாம்பியனாக மாற வேண்டும் என்ற தன்னுடைய கனவை, தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும் நனவாக்கியிருக்கிறார் குகேஷ். இதற்கு பின்னால் குகேஷ்க்கு இருக்கும் கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இலக்கை நோக்கிய பயணம் இவையெல்லாவற்றையும் இளைஞர்கள் எல்லோரும் உத்வேகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், செஸ் விளையாட்டுக்கென ‘ஹோம் ஆப் செஸ்’ என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று கூறினார்.