
தமிழ்நாடு அரசு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு சுகாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், மாநில மக்களின் உடல்நலம் மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதாகும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொருக்கும் அவர்களின் வசதிக்கேற்ப உயர்தரமான மருத்துவ சேவைகளை நேரில் சென்று வழங்கும் நோக்கில், தமிழக அரசு புதிய உன்னதமான முயற்சியாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்று (ஆகஸ்ட் 2-ம்தேதி) சென்னை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்ததில் முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் செயல்பட உள்ளதால், பலதரப்பட்ட மக்களும் இதன் மூலம் நேரடியாகப் பயனடைய உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் குடியிருப்பு பகுதிகளின் அருகிலேயே இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இந்த முகாம்கள் ஜூன் 2025 முதல் மார்ச் 2026 வரையிலான காலப்பகுதியில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தபட்சம் மூன்று முகாம்கள் நடைபெறும் என்றும், மாநகர பகுதிகளில் மக்கள் தொகையை பொருத்து கூடுதல் முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ முகாம்களில் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயத்துடிப்பு, எக்ஸ் ரே, கண், பல், தோல், குழந்தை நலன் உள்ளிட்ட 15 வகை மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
அதன் படி தமிழகம் முழுவதும் 1250 முகாம்கள் நடப்பட உள்ளதாகவும், அனைத்து பரிசோதனைளும் (முழு உடல் பரிசோதனை)இலவசமாக கட்டணம் ஏதும் இல்லாமல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெற தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் செலவாகும் என்பதால் ஏழை, எளிய பாமர மக்களால் இந்த பரிசோதனைகளை செய்ய இயலாது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் மக்களை அவர்கள் இருக்கும் பகுதிக்கே தேடிச் சென்று முழு உடல் பரிசோதனை செய்யும் வகையில் திட்டம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும் :
* முதியவர்கள், வயோதிகம் காரணமாக நடக்க முடியாதவர்கள், ஆதரவு இல்லாத முதியோர்கள் சிகிச்சைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். இந்த திட்டம் மூலம், அவர்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதால், அவர்களுக்கு சிறந்த முறையில் பலனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
* கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் நகர மருத்துவமனைகள் மிகவும் தொலைவில் இருக்கும் காரணத்தால் அங்கு சென்று சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுவர். இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவக் குழுவே கிராமப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று சிகிச்சை அளிப்பதால், அவர்கள் நேரம், செலவு ஆகியவற்றை மிச்சப்படுத்தலாம்.
* பயணிக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இத்திட்டம் மிகப்பெரும் நிவாரணமாக இருக்கும் என்றே சொல்லலாம். இதனால் இவர்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் நடக்கும் மருத்துவ முகாம்களில் எளிதாக சிகிச்சை பெற முடியும்.
* கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வசதி இல்லாத ஏழை, எளியோர் இத்திட்டத்தின் மூலம் இலவசமாக சிகிச்சை பெற முடியும் என்பதால் அவர்கள் இதன் மூலம் சிறந்த மருத்துவ சிகிச்சை பெற முடியும்.
* இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், சிறுநீரக பிரச்சனை போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகாட்டுதல்களும் இம்முகாம்களின் மூலம் அளிக்கப்படுகிறது. இந்த முகாம்களில் இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்களும் பங்கேற்க உள்ளனர்.
* இதே முகாமில், மாற்றத்திறனாளிகள் பரிசோதிக்கப்பட்டு, எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.
* புதிய காப்பீடு திட்டத்தில் இணைவதற்கும், முகாமில் விண்ணப்பிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்படும்.
மருத்துவ முகாம்களில் செய்யப்படும் பரிசோதனைகளின் முடிவுகள் அன்றைய தினம் மாலையிலேயே அவர்களுடைய செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் பகுதி வாரியாக நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு, துண்டு பிரசுரங்கள் வாயிலாக, அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.