

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நாளை மறுதினம் மே 4-ம் தேதி 62 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (மே 2) முதல் காவல் துறை உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு படை, ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4-ல் மோதல் மற்றும் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்க அரசியல் கட்சி அலுவலகங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் என தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களில் 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை மறுதினம் (மே 4) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கப்பட உள்ளது.
போலீசார் மே 4-ம் தேதி மூன்று ஷிப்டுகளில் பணிபுரிய உள்ளனர். இதன்படி, 7 AM - 1 PM, 1 PM - 9 PM, 9 PM - 7 AM எனப் பிரிந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
சட்டமன்ற தேர்தலின் போதும் தமிழ்நாடு முழுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை இணைந்து தற்போது பலத்த பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளன.
தமிழகமே வாக்கு எண்ணிக்கையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சூழலில், வாக்கு எண்ணிக்கை மையங்களை பாதுகாப்பாக கையாளும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இதன்படி அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் முகவர்களுக்கு க்யூஆர் கோடு கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்த பின்னரே யாராக இருந்தாலும் வாக்கு என்னும் மையத்திற்குள் செல்ல முடியும். அங்கீகாரம் இல்லாத நபர்கள் யாரையும் இந்த டிஜிட்டல் அணுகுமுறை உள்ளே அனுமதிக்காது.