உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்! ரூ.4 கோடியில் 400 சிறப்பு ஸ்கூட்டர்கள்..!

400 பேருக்கு ₹4 கோடி மதிப்பில் இலவச வாகனம்; மாணவர்களுக்கு முதல் முன்னுரிமை!
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர்
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர்Source:hindutamil

மணிகண்டன், எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில் பயனுள்ள தகவல்களையும் புதிய சிந்தனைகளையும் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார்.

Updated on: 

தமிழகத்தில் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்பு வாழ்க்கைக்கு உதவும் வகையில், முதற்கட்டமாக 400 பேருக்கு ரூ.4 கோடி மதிப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்தத் திட்டத்தின்கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களைத் தொடர்ந்து பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு வழங்கப்படும்.

பயனாளிகள் தனித்துவ மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுபவர்கள் 18 முதல் 65 வயதுக்குள் இருப்பதுடன், கைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். மேலும், ஸ்கூட்டரை இயக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஏற்கெனவே ஊர்திப்படி வழங்கப்படுவதால், அவர்களுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படாது. தகுதியுள்ளவர்கள் பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது மின்கலனால் இயங்கும் உபகரணம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே பெற முடியும்.

இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தனிப் பதிவேட்டில் வரிசைப்படி பதிவு செய்யப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒப்புதல் ரசீது வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலிடப்பட்டு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாவட்ட ஆட்சியர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு பயனாளிகளைத் தேர்வு செய்யும். நேர்முகத் தேர்வின்போது ஸ்கூட்டரை இயக்கிக் காண்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உபகரணங்கள் வழங்கப்படும்.

ஆண்டு ஒதுக்கீட்டைவிட அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டால், அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்னுரிமை அடிப்படையில் உபகரணங்கள் வழங்கப்படும்.

அரசு வழங்கும் சிறப்பு ஸ்கூட்டர்களை விற்பனை செய்யக்கூடாது. அதில் பொருத்தப்பட்டுள்ள இணைப்பு சக்கரங்களை அகற்றி, சாதாரண இருசக்கர வாகனமாகவும் பயன்படுத்தக்கூடாது. மாற்றுத்திறனாளிகளைத் தவிர மற்றவர்கள் இந்த வாகனங்களைப் பயன்படுத்தவும் அனுமதி இல்லை.

இந்த நிபந்தனைகளை பின்பற்றுவதாகப் பயனாளிகளிடமிருந்து உறுதிமொழிக் கடிதம் பெறப்படும். விதிமுறைகளை மீறி வாகனத்தைப் பயன்படுத்துவது தெரியவந்தால், வாகனம் பறிமுதல் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் மின்கலனால் இயங்கும் சிறப்பு உபகரணங்களைத் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.4 கோடி செலவிட அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
கிராம பெண்களுக்கு விலையில்லா கறவை மாடு திட்டம்: தகுதி, விண்ணப்பிப்பது எப்படி..?
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர்
logo
Kalki Online
kalkionline.com