மீன்கடை முதல் இரும்புக்கடை வரை: கிராமங்களில் கட்டாயமானது லைசென்ஸ்!

License Mandatory for Rural Business
Rural Business
Published on

தமிழ்நாட்டில் இனி கிராமங்களில் தொழில் செய்பவர்கள் கூட உரிமம் (Licence) பெற வேண்டியது அவசியம் என தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி மீன்கடை முதல் இரும்புக்கடை வரை 119 வகையான தொழில்களை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது. இது சாதாரண கிராம மக்களுக்கு சிரமமாக இருந்தாலும், கிராமங்களின் பொருளாதார வளர்ச்சியை அறிய உதவும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது‌. மேலும் இதன்மூலம் தமிழக அரசிற்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் உள்ள கடைகள் உள்பட தொழில் செய்பவர்கள் முறையான உரிமம் பெற வேண்டியது கட்டாயமாகியுள்ளது. கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் ‘தமிழ்நாடு கிராமப் பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் வழங்குவதற்கான விதிகள் 2025’ என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளதால், அதிகாரப்பூர்வ சட்டமாக அமுலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டம் டீக்கடை முதல் அனைத்து வகையான சிறு தொழிலுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் படி கிராமப்புறங்களில் தொழில் செய்பவர்கள், ஒவ்வொரு தொழிலுக்கும் ஏற்ப ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அச்சகம், இரும்புப் பொருள் - பழைய காகிதம் விற்பனை, தனியார் தபால் சேவை, தையல் தொழில், இறைச்சி மற்றும் மீன் கடைகள், சலவைத் தொழில், திருமண மண்டபங்கள் மற்றும் டீக்கடை உள்பட 119 சேவைத் தொழில்களை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது. ஒவ்வொரு தொழிலுக்கும் அந்தந்த கிராமப் பஞ்சாயத்திற்கு ஏற்ற வகையில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.30,000 வரை உரிமம் பெற கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற புதிய செயலி விரைவில் அறிமுகம்!
License Mandatory for Rural Business

கிராமப் பஞ்சாயத்துகளில் தொழில் செய்பவர்கள் உரிமம் பெறுவதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். அதோடு கிராமங்களில் தொழில்களை ஒழுங்குபடுத்த முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தச் சட்டம் கிராமப்புற வணிகத்தை மேம்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசின் சூப்பர் திட்டம்! இனி அனைத்து பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி..!
License Mandatory for Rural Business

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com