

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு வழங்கும் திட்டத்திற்குப் பதிலாக, இனி பணிபுரியும் நாட்களில் தினசரி ரூ.50 உணவுப்படி (Food Allowance) நேரடியாக வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச காலை உணவுத் திட்டத்திற்குப் பதிலாக, இனி தினசரி ரூ.50 உணவுப்படி (Food Allowance) நேரடியாக அவர்களது ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேரடியாக சென்று ஆலோசனை நடத்தினர். அப்போது வேலையை நிரந்தரமாக்குதல், மகப்பேறு விடுப்பு, சம்பளத்தை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேலும, தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம், பாத்திரங்களின் பராமரிப்பு மற்றும் அது விநியோகிக்கப்படும் நேரம் குறித்தும் புகார்கள் தெரிவித்தனர். எனவே தங்களுக்கு தற்போது வழங்கப்படும் உணவுக்குப் பதிலாக பணமாக (உணவுப்படி) வழங்க வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையின் முடிவில் முதற்கட்டமாக சில கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம். அதன்பின் அக்டோபர் மாதம் 3-ந்தேதி மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை தள்ளி வைத்தனர்.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள தூய்மைப் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், சுமார் 92% பணியாளர்கள் உணவுக்குப் பதிலாகப் பணமாகப் பெற்றுக்கொள்ளவே விருப்பம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக்கு பதிலாக ரூ.50 உணவுப்படி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 24,264 தூய்மைப் பணியாளர்களுக்கு, அவர்கள் வேலைக்கு வரும் நாட்களில் மட்டும் தினசரி ரூ.50 வீதம் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு மாதமும் சம்பளத்துடன் சேர்த்து இந்தப் பணம் வழங்கப்படும்.
சுமார் 92% தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு உணவாக வேண்டாம், அதற்குப் பதிலாக உணவுப்படியாகப் பணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததால் அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டும், அவர்கள் பணிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் தூய்மைப் பணியாளர்கள் ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் பணிக்கு வருகிறார்களோ, அத்தனை நாட்களுக்கு தலா (ஒரு நாளைக்கு) ரூ.50 வீதம் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு மாதமும் அவர்களது சம்பளத்துடன் சேர்த்து பணமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்காக ஏற்கனவே தனியார் நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த உணவு வழங்கும் ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சியின் நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் (Urbaser Sumeet, Ramky Enviro) மூலமாகப் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் இதர தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 24,264 தூய்மைப் பணியாளர்கள் பயனடைவார்கள்.
இதற்காக சென்னை மாநகராட்சி நிதியிலிருந்து ஆண்டுதோறும் ரூ. 44.28 கோடி செலவிட அரசு நிர்வாக அனுமதி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.