

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு, இன்று (ஜூன் 18) முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது.
சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வருகை தந்தனர். அப்போதும் திமுகவினர் முதல்வர் விஜய்க்கு எதிராக பதாகைகளை ஏந்தினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி முதல்வர் விஜய் சட்டமன்றத்திற்கு வருகை தந்தார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் வருகை புரிந்த போது, காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். ஆளுநரை சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் வரவேற்றார்.
முன்னதாக முதல்வர் பதவியேற்பு விழா மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது.
ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில், வணக்கம் என தமிழில் பேசத் தொடங்கினார் ஆளுநர். அதோடு தவெக-வின் இமாலய வெற்றியையும் பாராட்டி இருக்கிறார் ஆளுநர் அர்லேகர்.
அவர் உரையாற்றும் போது, “வணக்கம். 1967-ல் அறிஞர் அண்ணா, 1977-ல் எம்ஜிஆர்-க்குப் பிறகு தமிழ்நாட்டில் 2026-ல் வரலாற்றுப் புரட்சி நடந்துள்ளது. விசில் புரட்சி மூலம் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் முதல்வர் விஜய். கட்சியைத் தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து அசத்தியுள்ளது தவெக.
தற்போது நிதிப் பற்றாக்குறை இருந்தாலும், தவெக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி குறித்து வெகு விரைவில் அறிக்கை வெளியிடப்படும். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதை கலாச்சாரம் மேலோங்கி உள்ளது. இதனைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் சுமை இரட்டிப்பாகி ரூபாய் 10 லட்சம் கோடியை தொட்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு தனி நபரின் மீதான கடனும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் உள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை செயல்பாட்டில் உள்ளது. தொடர்ந்து இரு மொழி கொள்கை முறையே பின்பற்றப்படும். முந்தைய அரசின் தொழில் கொள்கைகள் தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கையை தவெக அரசு வெளியிடவுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும்.
கோவை, மதுரை மற்றும் ஓசூரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என ஆளுநர் தெரிவித்தார்
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு சிங்கப்பெண் அதிரடிப் படைத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. கடந்த சில கூட்டத் தொடர்களில் தமிழக அரசு கொடுத்த உரையை ஆளுநர் அப்படியே படிக்காதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழக அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக அப்படியே வாசித்தார். தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கிட்டத்தட்ட 39 நிமிடங்கள் உரையாற்றினார்