

தொழில், வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்விக்காக தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் தங்கி வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள், பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற தொடர் விடுமுறை பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். இருப்பினும், பண்டிகைக் காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது குதிரைக்கொம்பாக மாறியுள்ளதால், பெரும்பாலான பயணிகள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளையே முழுமையாக நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பண்டிகை காலப் பயணத்திற்காக ரயில்வே நிர்வாகம் 60 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவைத் தொடங்கினாலும், ஆன்லைன் தளம் திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தெற்கு நோக்கிய அனைத்து ரயில்களின் இருக்கைகளும் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.
மேலும், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் இணையதளத்தை பயன்படுத்துவதால் சர்வர் முடக்கமும் ஏற்பட்டு, முன்பதிவு செய்ய முயலும் சாமானிய பயணிகள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றனர்.
ரயில்களில் உறுதி செய்யப்பட்ட (Confirmed) டிக்கெட்டுகள் கிடைக்காத சூழலில், பொதுமக்கள் வேறு வழியின்றிப் பேருந்து பயணங்களையே நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதனைப் பயன்படுத்தி, சில தனியார் பேருந்துகள் பண்டிகைக் காலங்களில் வழக்கத்தை விட பல மடங்கு கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக பயணிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
தற்போது விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர்ந்து வரும் விடுமுறை காரணமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை பயன்படுத்தி ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதாக வந்துள்ள புகார்களின் பேரில் தமிழக போக்குவரத்துத்துறை தமிழகம் முழுவதும் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, விதிமீறல்கள் உள்ளதா என்பதைக் கண்காணிக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தப்பட உள்ளது. மேலும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
அரசுப் பேருந்துகளைப் போல ஆம்னி பேருந்துகளுக்கு ஒரே மாதிரியான அரசு நிர்ணயித்த பயணக் கட்டணம் இல்லை. எனவே தேவை மற்றும் சேவை அடிப்படையில் கட்டணம் மாறுபடலாம் என்பதால் இந்த கட்டண உயர்வு சிரமத்தை வருடந்தோறும் பண்டிகை நாட்களில் அனுபவித்து வருகின்றனர் பயணிகள்.
உதாரணமாக வழக்கமாக சென்னை–கோவை போன்ற வழித்தடங்களில் சுமார் ₹600–₹1,000 அளவில் இருந்த கட்டணம் சில பேருந்துகளில் இந்த பண்டிகை தினம் முன்னிட்டு சுமார் ₹3,000 வரை கூட உயர்ந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை–கன்னியாகுமரி பயணத்திற்கு சில இடங்களில் ₹6,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது.
இதற்கிடையே, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசுப் பேருந்து கட்டணத்தில் 500 ஆம்னி பேருந்துகளை ஆண்டு முழுவதும் இயக்கத் தயாராக இருப்பதாக இந்த ஆண்டு ஜூலையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றிலும் கட்டணம் உயர்வு இருக்குமா எனும் சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
ஆனால் விதிமீறல், பயணிகளிடம் முறைகேடான வசூல் உள்ளிட்ட புகார்கள் இருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும். பயணிகள் கூடுதல் கட்டணம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க ஏதுவாகத் போக்குவரத்துத் துறை சார்பில் உதவி எண்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுகின்றன.
போக்குவரத்துத் துறை புகார் எண் 1800 425 6151 இது போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் கட்டணமில்லா எண் ஆகும். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களுக்கு இந்த எண்ணை பயன்படுத்தலாம்.
புகாரை தொலைபேசி அழைப்பு, WhatsApp குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவு மூலமாகவும் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் மூலம் புகார் கொடுக்கும்போது பேருந்து நிறுவனத்தின் பெயர், பேருந்து எண் அல்லது பதிவு எண், பயணித்த தேதி மற்றும் நேரம், ஏறும் இடம் – இறங்கும் இடம், வசூலித்த கட்டணம்,முன்பதிவு செய்த தொகை / டிக்கெட்,அதிக கட்டணம் காட்டும் டிக்கெட் அல்லது ஸ்கிரீன்ஷாட், புக்கிங் இணையதள விவரம் இவற்றுடன் தேவைப்பட்டால் புகைப்படம் அல்லது வீடியோ போன்ற தகவல்களை தயாராக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, டிக்கெட் மற்றும் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை அழிக்காமல் வைத்திருப்பது முக்கியம்.