

நடுத்தர மக்களும் கடற்கரையில் பிரம்மாண்டமாக திருமண நிகழ்ச்சிகளை நடத்தும வகையில், ‘பீச் வெட்டிங்’ என்ற திட்டத்தை தமிழக அரசின் சுற்றுலாத்துறை (TTDC) புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ரூ.10,000 கட்டணம் செலுத்தி ECR கடற்கரையில் ‘பீச் வெட்டிங்’ நடத்திக்கொள்ளலாம் என்றும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
முன்பெல்லாம் திருமணங்கள் அனைத்தும் கல்யாண மண்டபத்தில்தான் நடந்தன. குறிப்பாக சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வசதியானவர்கள் தங்கள் கௌரவத்திற்காக திருமண நிகழ்ச்சிகளுக்கு ஆடம்பர மண்டபம், பெரிய ஹால், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களையே பிரதானமாக தேர்வு செய்கின்றனர். அதுவே, சற்று வசதி குறைந்தவர்கள் கோவில் அல்லது சிறிய மண்டபங்களில் திருமணத்தை நடத்துகின்றனர். ஆனால் பெரும் பணக்காரர்கள், தொழில் அதிபர்கள் ரிசார்ட், கடற்கரைகள், சுற்றுலா தலங்களில், ஏன் ஆகாயத்திலே கூட திருமண நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
முக்கிய பிரபலங்கள், பெரிய தொழிலதிபர்கள், கடற்கரை அருகில் உள்ள ரிசார்ட்களில் திருமண விழாக்களை நடத்துகின்றனர். பொதுவாக இந்த ரிசார்ட்களில் திருமண நிகழ்ச்சியை நடத்த லட்சக்கணக்கில் செலவாகும். இதன் காரணமாக பீச் ரிசார்ட்டுகளில் திருமண நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது, நடுத்தர மக்களுக்கு பெரிய கனவாகவே இருக்கிறது. அந்தவகையில் இனிமேல் சாதாரண நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களும் பீச் வெட்டிங்கை நடத்தும் வகையில், இந்த திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
திருமண நாட்கள் என்பது ஒரு நபரின் வாழ்க்கையின் மிக முக்கியமான மைல்கற்களில் ஒன்றாகும். திருமண விருந்தினர் பட்டியலில் இருந்து கேட்டரிங் வரை, ஒரு திருமணம் சிறப்பாக செயல்பட அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். ஒரு திருமணத்தை அழகாக்குவதற்கு மிக முக்கியமான காரணிகளில் ஒன்று அதன் இடம்.
கடற்கரை திருமணம் என்பது மிகவும் அழகியல் ரீதியாக மகிழ்ச்சிகரமானதாக இருந்தாலும், சரியான முறையில் திட்டமிடப்பட்டால், அது ஒரு அற்புதமான நிகழ்வாக இருக்கும். மணல், கடல் நீர் பின்னணி மற்றும் கடல் வாசனை ஆகியவற்றில் மலர் அலங்காரங்களுடன் கடற்கரை திருமணத்தை கனவு காணும் பலருக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
சூரிய அஸ்தமன நேரத்தில் கடற்கரை திருமணம் என்பது ஒரு அற்புதமான காட்சி. அந்தியின் சாயல்கள், வானத்தில் நடனமாடும் வண்ணங்கள், சிவப்பு சூரியன் கடலைச் சந்திக்கும் அடிவானம் ஆகியவை உங்கள் திருமண நாளில் மறக்க முடியாத அனுபவத்தை தரும்.
இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், அறிமுகப்பட்டுத்தி உள்ள ‘பீச் வெட்டிங்’ திட்டத்தின் கீழ், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள் சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலக அனுமதியுடன், இனி கடற்கரையில் திருமணம் செய்து கொள்ள முடியும்.
இடத்திற்கான முன்பதிவு கட்டணம் மற்றும் பராமரிப்புக்காக சுமார் ரூ.10,000 செலுத்த வேண்டியிருக்கும். 22 மணி நேரம் தங்குவதற்கு சுமார் ரூ.5,000ம், சைவ உணவு ஒரு நபருக்கு ரூ.700-லிருந்தும், அசைவ உணவு ரூ.1,100-லிருந்தும் தொடங்குகிறது. திருமணத்திற்கான மேடை, அலங்காரங்கள், விளக்குகள் போன்ற அலங்கார ஏற்பாடுகளை திருமண வீட்டினர் செய்து கொள்ள வேண்டும்.
இதுகுறித்து தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது, தற்போது கடற்கரை திருமணம் என்ற முறையை பலரும் எதிர்பார்ப்பதால் இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் வாயிலாக இது செயல்படுத்தப்பட்டாலும் அரசு சார்பில் இனி குறைந்த விலையில் இதில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
தனியார் ரிசார்ட்டுகளைவிட குறைந்த கட்டணத்தில் அழகிய கடற்கரை சூழலை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். முன்பதிவு முதல் கட்டமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரம் தமிழ்நாடு ஹோட்டல் ரிசார்ட்டில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அங்குள்ள கடற்கரை மணல் வெளியில், திருமண நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்தலாம்.
தற்போது மாமல்லபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை விரைவில் விரிவுபடுத்தும் வகையில், கோவளம், மெரினா, நாகப்பட்டினம், ராமநாதபுரம் கடற்கரைகளை ப்ளூ ஃபிளாக் தரத்திற்கு அரசு மேம்படுத்துகிறது.
முன்பதிவு மற்றும் பீச் வெட்டிங் குறித்து கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள www.ttdconline.com என்ற TTDCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் என்று கூறினார்.