

என்னதான் இன்றைய உலகம் நவீன மயமாகி விட்டாலும், பழைய பொருட்களுக்கு என்றுமே மதிப்பு அதிகம் தான். இதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது பஞ்சாப் மாநிலத்தில் அரங்கேறிய ஒரு ருசிகர சம்பவம்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் துருப்பிடித்த பழைய டிராக்டரை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிடவே, அது மிகவும் வைரலானது.
இந்த டிராக்டர் ஜெர்மனியைச் சேர்ந்த 105 ஆண்டுகள் பழமையான டிராக்டர் என்பது இணையத்தில் பரவிய பிறகு தான் தெரிந்தது. பிறகு அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், விவசாயியிடம் நேரடியாக ரூ.1.25 கோடியை கொடுத்து அந்த பழைய டிராக்டரை விலைக்கி வாங்கியுள்ள நிகழ்வு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. துருப்பிடித்த பழைய டிராக்டரின் மூலம் பஞ்சாபை சேர்ந்த விவசாயி இன்று கோடீஸ்வரராக மாறியுள்ளார்
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரின் ஷஹீத் பகத் சிங் சௌக் என்ற பகுதியில், பல ஆண்டுகளாக பழைய மற்றும் துருப்பிடித்த ஒரு டிராக்டர் கைவிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதன் உரிமையாளர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டார்.
அங்கிருந்த ஒரு பழைய கட்டிடத்திற்கு அருகே, யாருமே கண்டுகொள்ளாத பழைய இரும்புப் பொருளாகவே இந்த டிராக்டர் பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டம் எப்போது கதவை தட்டும் என்று யாருக்குமே தெரியாது. அவ்வகையில் இந்த துருப்பிடித்த டிராக்டர் கொடுத்த அதிர்ஷ்டத்தால், பஞ்சாபைச் சேர்ந்த விவசாயி ஒருவர் இன்று கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
சுமார் 2 மாதங்களுக்கு முன்பு, இந்த பழைய டிராக்டரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இணையத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி உலகெங்கிலும் உள்ள 'ஆன்டிக்' (Antique) எனும் பழங்காலப் பொருட்களை சேகரிப்பவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
டிராக்டரின் சிறப்பு:
* பஞ்சாபில் இருந்த துருப்பிடித்த டிராக்டர், ஒரு சாதாரண டிராக்டர் அல்ல. இது 1921-ம் ஆண்டு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட "லான்ஸ் புல்டாக்" (Lanz Bulldog HL 12) என்ற அரிய வகை மாடலைச் சேர்ந்தது.
* தற்போதைய நிலவரப்படி இந்த டிராக்டர் சுமார் 105 ஆண்டுகள் பழமையானது. அதாவது இந்த டிராக்டர் ஒரு நூற்றாண்டை அசாதரணமாக கடந்திருக்கிறது.
* இந்த வகையான டிராக்டர்கள், தற்போது உலகில் மிகக் குறைவாகவே உள்ளன. இது 12 குதிரைத் திறன் (Horse Power) கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொண்டது
ரூ.1.25 கோடிக்கு விற்பனை:
இணையதளத்தில் டிராக்டர் குறித்த வீடியோ வைரலானதும், மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதற்கு ரூ.2 லட்சம் விலை பேசியது. அதன் பின்னர் ஏலம் போல இதன் விலை உயர்ந்து கொண்டே போனது.
இறுதியாக அமெரிக்காவை சேர்ந்த பழங்காலப் பொருட்களை சேகரிக்கும் ஒருவர் இதனை ரூ.1.25 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.
கடந்த பிப்ரவரி 18-ம் தேதி, துருப்பிடித்த டிராக்டர் ஒரு கிரேன் உதவியுடன் தூக்கப்பட்டு, லாரி மூலம் மும்பை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து கடல் மார்க்கமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த டிராக்டர் அமெரிக்காவில் உள்ள ஒரு விவசாய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பழைய இரும்பு என்று நினைத்த ஒரு பொருள் தற்போது ஒரு விவசாய குடும்பத்தையே கோடீஸ்வரர் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது. பழைய பொருட்களுக்கு என்றுமே மதிப்பு அதிகம் என்பதை இந்த சம்பவம் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது