

சென்னை தொல்காப்பிய பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள நாளொன்றுக்கு 500 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் வரும் பிப்ரவரி 1-ம்தேதி முதல் நாள் ஒன்றுக்கு 3000 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டணத்திலும் தளர்வு வழங்கப்பட உள்ளது.
தொல்காப்பியப் பூங்கா அல்லது அடையாறு பூங்கா என்பது தமிழக அரசால் அடையாற்றில் திறக்கப்பட்டுள்ள பூங்காவாகும். இப்பூங்காவில் பல வகையான தாவர வகைகள் உள்ளன. இப்பூங்காவிற்கு பழந்தமிழ் நூல் இயற்றிய தமிழ்ப் புலவர் தொல்காப்பியரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் ரூ.42.7 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பிய பூங்கா, கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது. தொல்காப்பியா பூங்கா ஒரு முக்கிய நகர்ப்புற சதுப்பு நில வாழ்விடமாக மாறியுள்ளது. சீரமைப்புக்குப் பிறகு, நடைபாதை தூரம் 1.95 கி.மீ. இல் இருந்து 3.20 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
சீரமைப்பிற்குப்பிறகு தற்போது வரை 6,843 மாணவர்களும், 20,233 பொதுமக்களும் பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர். 549 வகையான உயிரினங்கள் இப்பூங்காவில் உள்ளன.
இந்த பூங்கா, சதுப்பு நில சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க மிகவும் கவனமாக நிர்வகிக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் பரிந்துரைகளின்படியே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு நேரத்தில் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பூங்காவிற்குள் ஒரே நேரத்தில் 300 பேருக்கு மேல் இருக்க முடியாது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை (CRRT) ஊழியர்கள் மேற்கொள்கின்றனர்.
தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்காக காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தற்போது 500 என்ற எண்ணிக்கையில் உள்ள நடைப்பயிற்சி அனுமதியை பிப்ரவரி 1-ந்தேதி முதல் 3000 என்ற எண்ணிக்கையில் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண விவரங்கள்:
நடைப்பயிற்சி அடையாள அட்டை மூன்று வண்ணங்களில் வழங்கப்படும். ஒவ்வொரு வண்ண அடையாள அட்டை பெற்ற பயனாளிகளும் வாரத்தில் மூன்றுமுறை வந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
நடைப்பயிற்சி அடையாள அட்டை பெறுவதற்கான திருத்திய கட்டணமாக ஒருவருக்கு
ஒரு மாதத்திற்கு ரூ.500 என்று இருப்பது தற்போது ரூ.250 ஆகவும்,
3 மாதங்களுக்கு ரூ.1500 என்று இருப்பது ரூ.750 ஆகவும்,
6 மாதங்களுக்கு ரூ.2500 என்று இருப்பது ரூ.1250 ஆகவும்,
12 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரம் என்று இருப்பது ரூ.2500 ஆகவும் குறைத்து நிர்ணயிக்கப்பட உள்ளது.
ஒரே நேரத்தில் 300 பார்வையாளர்கள் மட்டுமே பூங்காவினுள் இருக்கும் வகையில் முறைப்படுத்தப்பட இருக்கிறார்கள்.
நுழைவுசீட்டு முன்பதிவு மற்றும் பிற விவரங்களை www.crrt.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.