

தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்று (ஆர்.சி) ஆகியவை இனி கார்டு வடிவில் இல்லாமல் டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை பொதுமக்கள் பதிவிறக்கம் (Download) செய்துகொண்டு உபயோகிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில் இது குறித்த கூடுதல் விவரங்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி 110 விதியின் கீழ் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
அதன்படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனத்தைப் பதிவு செய்வதற்கும், வாகனப்பதிவு புதுப்பித்தல் மற்றும் படிப்படியாக போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் தமிழ்நாட்டில் எந்தவொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து எங்கும் பதிவு/உரிமம் வழங்குதல் (எனிவேர் ரிஜிஸ்ட்ரேசன்/லைசென்சிங்) என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த ஆவணங்களை (ஓட்டுநர் உரிமம்) சிப் பொருத்தப்பட்ட அட்டையாக தபால் மூலம் விண்ணப்பதார்களின் முகவரிக்கு அனுப்படும் நடைமுறையால் ஏற்படும் கால தாமதத்தைக் கருத்தில் கொண்டும், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த உள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். அதன்படி, இந்த நடைமுறை வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறை தொடர்பான அனைத்துச் சேவைகளும் மத்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988 (Central Motor Vehicles Act, 1988) மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள், 1989 (Tamil Nadu Motor Vehicles Rules, 1989) ஆகியவற்றின் கீழ் தான் முறைப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்தச் சட்டங்களின் கீழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO) மூலம் பழகுநர் உரிமம் (LLR), நிரந்தர ஓட்டுநர் உரிமம் (DL), உரிமம் புதுப்பித்தல், சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்குதல், புதிய வாகனப் பதிவு, தற்காலிகப் பதிவு, பிற மாநில வாகனங்களுக்கான மாற்றுப் பதிவு (Re-registration), உடமை மாற்றுதல் (Transfer of Ownership), வணிக ரீதியிலான (Commercial) வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் மற்றும் பேருந்துகளுக்கான இயக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு சார்ந்த பணிகள் ஆன்லைன் வழியில் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது இந்தச் சேவைகள் பெரும்பாலானவை மத்திய அரசின் 'சரதி' (Sarathi) மற்றும் 'வாகன்' (Vahan) ஆகிய இணையதளங்கள் மூலம் ஆன்லைனிலேயே எளிதாகப் பெறும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
பழைய முறைப்படி ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றால், முதலில் மத்திய அரசின் பரிவாஹான் (Parivahan) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து, ஓட்டுநர் பயிற்சி உரிமத்தை பெற வேண்டும்.
அதனைப் பெற்று 6 மாத காலத்திற்குள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்து, ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவதின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது.
சிப், புகைப்படத்துடன் கூடிய அசல் ஓட்டுநர் உரிமம் ஸ்மார்ட் கார்டு வடிவில் தபால் மூலம் விண்ணப்பதார்களின் வீட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கான ரூ. 250 கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது. ஆனால் இந்த பழைய நடைமுறையில் விண்ணப்பதாரர்களுக்கு அசல் ஓட்டுநர் உரிமம் கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
இந்தக் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை பொதுமக்கள் தாங்களே டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் புதிய நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, வரும் செப்டம்பர் 15 முதல் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்து, ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் நாளிலேயே (அன்றைய தினமே), அவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
உரிமம் அங்கீகரிக்கப்பட்ட தகவல் விண்ணப்பதாரின் மொபைல் எண்ணிற்கு வந்த பின்னர், ஓடிபி கொண்டு டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை பரிவாஹான் இணையதளத்தில் வழியாகவோ அல்லது எம்.பரிவாஹான் செயலியின் மூலமாகவோ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அப்படி பதிவிறக்கம் செய்யும் ஆவணங்கள் கியூஆர் கோர்டு (QR Code) உடன் விநியோகிக்கப்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் கியூஆர் கோர்டு-ஐ ஸ்கேன் செய்து மின்னணு முறையில் ஆவணங்களைச் சரிபார்க்க முடியும். இதன் மூலம் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும்.
இனிமேல் ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டாலோ, சேதமடைந்தாலோ மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.