

மாதிரி ஆவணப்பதிவு மையங்களில் பத்திரம் பதிவு செய்ய தட்கல் பிரீமியம் கட்டணம் ரூ.10,000 என அரசு நிர்ணயம் செய்துள்ளது.
தமிழக அரசு நிலம் மற்றும் சொத்துப் பதிவுகள் மற்றும் திருமணப் பதிவுகளை விரைவாகச் செய்யும் வகையில், முதல் கட்டமாக 5 புதிய மாதிரி ஆவணப் பதிவு மையங்களை (Model Document Registration Centres) அமைத்து, புதிய சேவைக் கட்டணங்களை அறிவித்துள்ளது. மேலும் மாதிரி ஆவணப் பதிவு மையங்களை அமைக்க ரூ.7 கோடியே 84 லட்சத்து 15 ஆயிரத்து 236 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது சொத்து ஆவணப் பதிவு மற்றும் திருமணப் பதிவு ஆகியவை தொடர்புடைய சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில், ஒரு பதிவு மாவட்டத்துக்குள் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான மாதிரி ஆவணப்பதிவு மையத்தில் ஆவணங்களைப் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாணையின்படி, முதல் கட்டமாக பின்வரும் 5 இடங்களில், அதாவது, சென்னை வடக்கு, சென்னை மத்திய, சென்னை தெற்கு, செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர் வடக்கு ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் மாதிரி ஆவணப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த 5 மையங்களின் வரவேற்பைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கூடுதலாக 20 இடங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மையங்களை அமைத்து பராமரித்து, அன்றாடச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பானது போட்டி ஒப்பந்தப்புள்ளி முறையில் தேர்வு செய்யப்பட்டு, தனியார் சேவை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இதற்கான ஒப்பந்தக் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்.
இந்த புதிய மாதிரி ஆவணப் பதிவு மையங்களில் வழக்கமான சேவை, தட்கல் வழக்கமான சேவை, பிரீமியம் சேவை, தட்கல் பிரீமியம் சேவை என 4 வகையான சேவைகளுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
புதிய மாதிரி ஆவணப் பதிவு மையங்களின் கட்டண விபரங்கள் :
இந்த மையங்களில் ஆவணப் பதிவு மற்றும் திருமணப் பதிவுக்கான வசதிக் கட்டணம், சேவையின் வகைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* ஒரு ஆவணம் அல்லது திருமணப் பதிவுக்கு வழக்கமான சேவை (Standard Service): ரூ. 2,000
* தட்கல் வழக்கமான சேவை (Tatkal Standard Service): ரூ. 5,000
* பிரீமியம் சேவை (Premium Service): ரூ. 5,000
* தட்கல் பிரீமியம் சேவை (Tatkal Premium Service): ரூ. 10,000
இந்த கட்டணம், மாதிரி ஆவணப் பதிவு மையங்களில் சேவை வழங்குவதற்கான அரசின் வசதிக் கட்டணங்கள் மட்டுமே. இதனுடன் பொருந்தக் கூடிய முத்திரைத்தாள் தீர்வை (Stamp Duty) மற்றும் பதிவுக் கட்டணங்களையும் பொதுமக்கள் எப்போதும் போல் செலுத்த வேண்டும்.
இந்த மையங்கள் ஒற்றை சாளர வசதியை வழங்கும்.
இதன் மூலம் சொத்து அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரின் பிராந்திய அதிகார வரம்பை பொருட்படுத்தாமல், மக்கள் பதிவுச் சேவைகளை அணுக முடியும். இந்த மையங்கள், அவற்றின் வகையைப் பொறுத்து 3,000 முதல் 8,000 சதுர அடி வரையிலான பரப்பளவில் அமைய உள்ளது. மேலும், இவை பயோமெட்ரிக் முறை, சுய சேவை மையங்கள், சி.சி.டி.வி கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் வசதிகள் ஆகியவை உடன் செயல்படும்.
அதிகாரப்பூர்வ பத்திரப்பதிவு அதிகாரங்கள் அனைத்தும் மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் சார் பதிவாளர்களிடமே இருக்கும் என்றும் தனியார் நிறுவனம் உள்கட்டமைப்பு மற்றும் ஆவண செயலாக்க உதவிகளை மட்டுமே கவனிக்கும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த புதிய மையங்களில் வசூலிக்கப்படும் வசதிக் கட்டண வருவாயை அரசு மற்றும் மையங்களை இயக்கும் தனியார் இடையே பகிரப்படும்.
அதன்படி வழக்கமான சேவை மற்றும் தட்கல் வழக்கமான சேவைகளில் வசூலிக்கப்படும் தொகையில் 80 சதவீதம் அரசுக்கும், 20 சதவீதம் தனியாருக்கும், பிரீமியம் சேவையில் அரசுக்கும்- தனியாருக்கும் தலா 50 சதவீதம் பகிரப்படும். தட்கல் பிரீமியம் சேவையில் 65 சதவீதம் அரசுக்கும், 35 சதவீதம் தனியாருக்கும் பகிரப்படும்.
இந்த 5 முன்னோடி மையங்களும் 180 நாட்களுக்குள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசதி கட்டண வருவாய் போதுமானதாக இல்லாத நிலையில், மாதாந்திரக் கட்டணத்தை செலுத்த இந்த நிதியைப் பயன்படுத்தலாம் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இது பொதுமக்களுக்குக் கூடுதல் கட்டணச் சுமையை ஏற்படுத்துவதோடு பத்திரப் பதிவுத் துறையைத் தனியார்மயமாக்க வழிவகுக்கும் என எச்சரித்துள்ள நிலையிலும், அரசு இத்திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.