

தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது. தற்போதைய புதிய அரசில் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களை ஊக்கவிக்கவும், விளையாட்டு துறையை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் போதை எதிர்ப்பு தின மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. அதில் முதல்வர் விஜய்யுடன், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும் கலந்து கொண்டு ஓடினார். விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் தமிழக அரசு, இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஆர்வமுடன் பங்கேற்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
இந்நிலையில் விளையாட்டு வீரர்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், “அரசு விளையாட்டு விடுதிகளில் ஏசி வசதியை அமைக்க முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். வெளிமாநிலத்தில் நடக்கும் போட்டிகளுக்கு செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு விமான பயண வசதி செய்து தரப்படும். தலைநகர் சென்னையில் உலகத் தரம் வாய்ந்த பேட்மிண்டன் அகாடமியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் பதவியேற்ற கடந்த 2 மாதங்களில் ரூ.12 கோடி மதிப்பிலான விளையாட்டுத் துறை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளிர். தமிழக பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு பெரிய தொகை ஒதுக்கப்பட உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் சர்வதேச விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு மாறும்.
வெகு விரைவில் எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதுதவிர்த்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒரு அணியிலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றொரு அணியில் இருந்து விளையாடும் படி போட்டிகள் நடத்தப்படும்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
விளையாட்டுத் துறையை மேம்படுத்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு, இன்று காலை பாமக தலைவர் அன்புமணியுடன் இணைந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இறகுப் பந்து வீரர்களுடன் விளையாடினர். பாமக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தற்போதைய ஆளும் தமிழக அரசுடன் நெருக்கம் காட்டி வருவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் முதல்வர் விஜயை சந்தித்த அன்புமணி, வன்னியர் இட ஒதுக்கீட்டில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் தமிழக விளையாட்டு வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்த நிலையை மாற்ற தற்போது பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, தீவிர முயற்சிகளை எடுக்கும் என அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதோடு, ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கம் வெல்லும் அளவிற்கு, விளையாட்டுத் துறை மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
ஆசிய மற்றும் தேசிய அளவில் தமிழக விளையாட்டு வீரர்கள் பல வெற்றிகளைப் பெற்றாலும், சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றிக்கோட்டைத் தொடுவதில் சிரமப்படுகின்றனர். வீரர்களின் உத்வேகத்தை அதிகப்படுத்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பே சில முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார் அமைச்சர்.
இருப்பினும் பட்ஜெட் வெளியீட்டின் போதே விளையாட்டுத் துறைக்கு தமிழக அரசு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்பது தெரிய வரும்.