

மாதம்தோறும் வரும் அதிகமாக வரும் மின்சாரக் கட்டணத்தை நினைத்து கவலைப்படுபவராக இருந்தால் இனி அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம். உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் சூரிய மின்சக்தி பேனல்களை (Solar Panels) அமைத்தால், அரசு சார்பாக இப்போது பெருமளவில் மானிய உதவி கிடைக்கும்.
மத்திய அரசின் பிரபல 'பிஎம் சூர்யா கர்' (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்துடன் சேர்த்து, தற்போது தமிழ்நாடு அரசும் தனியாக ஒரு மானியத் தொகையை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வீடு வைத்திருப்பவர்கள் சோலார் அமைக்கும் போது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை (சோலார் மானியம்) மானியமாகப் பெற முடியும்.
தமிழ்நாடு, பசுமை ஆற்றல் கட்டமைப்பில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய தூய்மையான மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், வீடுகள்தோறும் மேற்கூரை சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் வீடுகள்தோறும் மேற்கூரை சோலார் திட்டத்தை எளிதாக தெரிந்துகொண்டு, மானிய விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்கும் வகையில் தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத்திட்டம் (Tamilnadu Rooftop State Subsidy Scheme) ஒன்று புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தமிழ்நாட்டில் மேற்கூரை சூரியஒளி (சோலார்) மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆகஸ்ட் 5 முதல் விண்ணப்பிக்கும் நுகர்வோருக்கு மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழக அரசின் சிறப்பு கூடுதல் மானியமும் இணைக்கப்பட்டு நேரடி மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
சோலார் திறன் மற்றும் வழங்கப்படும் மொத்த மானியம்...
நீங்கள் உங்கள் வீட்டில் அமைக்கும் சோலார் அளவைப் பொறுத்து (கிலோவாட் - kW) மானியத் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வந்துவிடும்.
* கிலோவாட் வரை- ரூ.35,000 மானியமாக கிடைக்கும். அதாவது, மத்திய அரசு வழங்கும் ரூ.30,000 + தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.5,000 என மொத்தம் ரூ.35,000 மானியம் கிடைக்கும்.
* கிலோவாட் வரை- ரூ.70,000 மானியமாக கிடைக்கும். அதாவது, மத்திய அரசு வழங்கும் ரூ.60,000 + தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.10,000 என மொத்தம் ரூ.70,000 மானியம் கிடைக்கும்.
* கிலோவாட் வரை- ரூ.1,00,000 வரை மானியமாக கிடைக்கும். அதாவது, மத்திய அரசு வழங்கும் ரூ.78,000 மற்றும் தமிழ்நாடு அரசின் சிறப்பு மானியம் ரூ.22,000 என மொத்தம் ரூ.1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) மானியம் கிடைக்கும்.
மத்திய அரசின் மானியம் வரவு வைக்கப்பட்டவுடன், இந்த மாநில இணையதளம் தானாகவே பொறுப்பேற்று, மானியம் தொகையை விடுவிக்கும். தமிழ்நாட்டிற்கான கூடுதல் மானியத் தொகைக்கு இரண்டாவது விண்ணப்பம் எதுவும் பதிவு செய்ய தேவையில்லை.
பொதுவாக 3 கிலோவாட் சோலார் பேனல் வைத்தால், ஒரு நடுத்தரக் குடும்பத்திற்குத் தேவையான விளக்குகள், மின்விசிறிகள், ஃப்ரிட்ஜ், டிவி மற்றும் ஒரு ஏசி ஆகியவற்றை எளிதாக இயக்க முடியும் என்பதால் உங்கள் மின் கட்டணம் பூஜ்ஜியமாக மாற வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை பிரதம மந்திரி சூர்யாகர் இலவச மின்சாரத் திட்டத்தின் மூலம் 1,13,714 மேற்கூரை சோலார் இணைப்புகளுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 97,732 சோலார் மின் இணைப்புகள் வெற்றிகரமாகச் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதன் மூலம் 337.49 மெகாவாட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, மார்ச் 2027-க்குள் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் வீடுகளில் சோலார் தகடுகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
மேற்கூரை சோலார் திட்டத்தை பொதுமக்கள் எளிதாக அணுகி பயன்பெறும் வகையில், https://tnebltd.gov.in/usrp/ என்ற புதிய மேற்கூரை சூரியசக்தி இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் வாயிலாக பொதுமக்கள் வீடுகளின் மேற்கூரை சோலார் திட்டம் குறித்த முழுமையான தகவல்கள், மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் மானிய விவரங்கள், மேற்கூரை சோலார் அமைப்பதற்கான வழிமுறைகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, அங்கீகரிக்கப்பட்ட சோலார் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்களைப் ஆகியவற்றினை எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்கவும், இயற்கைக்கு உகந்த மாசில்லா பசுமை மின்சாரத்தைப் பயன்படுத்தவும் இது மிகச் சிறந்த வாய்ப்பாகும். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் இந்த அருமையான திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பலன் பெறலாம்.